கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியின்

ஆர்ப்பாட்டத்தின்போது மஹிந்த, கோட்டபய அணியின் மக்கள் பலத்தைக் கண்டு அமெரிக்கா அச்சமடைந்ததா அல்லது ஆதரவா?

அமெரிக்கப் பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையின் பின்னணி குறித்த கேள்விகள்
பதிப்பு: 2018 செப். 05 15:11
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 18:22
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை கொழும்பில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கத் தூதரகம் தமது ரூவீற்றர் தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. பாரிய அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் மூலம் மஹிந்த ராஜபக்ச அணிக்கு அதிகளவு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை அமெரிக்கா உலகத்துக்கு காண்பிக்க விரும்புகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.
 
குறிப்பாக இலங்கைப் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மஹிந்த, கோட்டபய ஆகியோரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என அமெரிக்கா முன்கூட்டியே கருதுகின்றதா?

ஈழத் தமிழர்களின் கடல்சார் வளங்களை மையப்படுத்தியதாக வரவுள்ள இந்த அரசியல் மாற்றம் ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல இலங்கைத் தீவின் இறைமைக்கும் பெரும் ஆபத்து--சட்டத்தரணி காண்டீபன்

அல்லது அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை அமெரிக்கா செயற்கையாகவே உருவாக்கி மஹிந்த அணியைப் பலப்படுத்துகின்றதா என்ற கேள்விகள் இயல்பாகவே எழுந்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தலைமையிலான நேச நாடுகள்தான் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் பெரும் பங்காற்றியிருந்தன.

அத்துடன் மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அமெரிக்கா முக்கிய பங்களிப்புச் செயதிருந்தது. ஆனால் தற்போது மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமெரிக்காவுக்கு நம்பிக்கையிழந்துவிட்டதோ என்ற சந்தேகங்கள் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளன.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவை அடுத்த ஆண்டு நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிக்க அமெரிக்கா காய்களை நகர்த்துகின்றதா என ஏலவே கூர்மைச் செய்தித் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருந்தது.

தாங்கள் எதிர்ப்பார்த்த அரசியல். பொருளாதார நலன்களை சரியான முறையில் மைத்திரி- ரணில் அரசாங்கம் முன்கொண்டு செல்லவில்லை என்ற அதிருப்திகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஜப்பான் அரசு மூலமாக காய் நகர்த்தல்களை இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ச அணி நடத்தும் ஆர்ப்பாட்டம் குறித்து, அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

போரக்காலத்தில் மாத்திரமே இவ்வாறான பயண எச்சரிக்கைகளை அமெரிக்கா. பிரித்தானியா போன்ற நாடுகள் விடுத்திருந்தன.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில். அதுவும் இந்த நாடுகளினால் 2015 இல் பதவி கவிழ்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் அரசியல் அணியின் ஆர்ப்பாட்டத்திற்கு அமெரிக்கா அச்சமடைந்ததா அல்லது மறைமுக ஆதரவா என்பதுதான் இங்கு முக்கியமான சந்தேகம் என அவதானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகளை சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளது.

ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

அதற்கு முன்னதாக அமெரிக்கக் கடற்படையும் திருகோணமலைத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளித்திருந்தது. பின்னர் தொள்ளாயிரம் அமெரிக்கப் படைகளுடன் அமெரிக்கப் போர்க் கப்பல் ஒன்றும் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வருகை தந்தது.

ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, ஒரு வாரத்திற்கு முன்னர் கையளித்திருந்தார்.

ஆகவே. சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு இலங்கையில் மற்றுமொரு அரசியல் மாற்றத்தை தமது நலன்களுக்கு ஏற்ப இந்தியா. ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் உருவாக்க முற்படுவதாக சட்டத்தரணி காண்டீபன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் கடல்சார் வளங்களை மையப்படுத்தியதாக வரவுள்ள இந்த அரசியல் மாற்றம் ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல இலங்கைத் தீவின் இறைமைக்கும் பெரும் ஆபத்து எனவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த அணி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், மைத்திரி- ரணில் அரசாங்கம் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்த பத்து இலட்சம் மக்களை கொழும்பு நகரத்துக்குள் கொண்டு வருவோம் என கூட்டு எதிர்க்கட்சி சவால் விடுத்திருந்தது.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான கோட்டபய ராஜபக்ச பிரதான ஹீரோவாக காண்பிக்கப்பட்டிருந்தார்.

போரை வெற்றி கொண்ட தலைவன் என மக்கள் கோசம் எழுப்பியதாக கொழும்புச் செய்தியாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இந்தியா. ஜப்பான். மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இறுதிப் போருக்கான உதவிகளை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் தமது நல்ன்சார்ந்து செயற்படவில்லை என்ற காரணத்தினாலேயே ஜெனீவா மனித உரிமைச் சபையில் போர்க்குற்ற விசாரனை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மஹிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்திரு்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.