கிழக்கு மாகாணம் அம்பாறை

திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேசத்தில் காணிகளை மீட்டுத்தரமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மீளக்குடியமர ஏற்பாடுகள் எதுவும் இல்லையெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 செப். 20 22:17
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: செப். 21 11:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணம் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்தில் மூன்று ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமது பாரம்பரிய காணி என்றும் மீளக்குடியமர பிரதேச மக்கள் விரும்பியபோதும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் சிலர் தடுத்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகின்றனர். போர் காரணமாக தமது பிரதேங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்த நிலையில், மீளக்குடியமர்வதற்கு உதவியளிக்குமாறு பல தடவை கோரிக்கை விடுத்திருந்தாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

1965 ஆம் ஆண்டில் இருந்து இந்தக் காணிகளில் வாழ்ந்து வந்தமைக்கான காணி உறுதிப்பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான முன்நூறு ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரசின் வன இலாக திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்திய நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று அம்பாறை திரு்க்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

போரினால் இடம்பெயந்த குடும்பங்களில் முப்பது குடும்பங்கள் தற்போது நிர்க்கதியான நிலையில் வாழ்கின்றனர். அவர்களை உடனடியாக மீளக்குடியமர்த்த ஏற்பாடுகளை செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

மீளக் குடியேறுவது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரிடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லையென மக்கள் குறிப்பிட்டனர்.

இயல்பான முறையில் மீளக்குடியமர முற்பட்டபோதும் சில குழுக்கள் அச்சுறுத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக பல்லாயிரக்கனக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.