இலங்கையில் கடும் மழை தொடரும் என எச்சரிக்கை

அனர்த்தங்களில் சிக்கி ஒன்பது பேர் பலி- 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் பாதிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
பதிப்பு: 2018 ஒக். 09 14:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 15:16
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் கடும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கடும் மழை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, பதுரலிய, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது எனவும், ஒருவர் காணாமல்போயுள்ளார் எனவும் இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இயற்கை அனர்த்தங்களில் 12 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆயிரத்து 350 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அத்தோடு, 1,668 இற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

உயிரிழந்த 9 பேரில் 6 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார்கள். இவர்களில் நான்கு பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனையவர்களில் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் அடங்குகின்றனர் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அடைமழையால் களுத்துறை, காலி, கொழும்பு மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்களும் சேதமடைந்துள்ளன. சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவை வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெதுறு ஓயா, லக்ஷபான, ராஜாங்கனை மற்றும் பொல்கொல்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீசெல்ஸ் நாட்டிலிருந்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்படி பணிப்புரையை மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

உலர் உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நலன்பேணல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் இலங்கை ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 144 பகுதிகளிகளில் 1200 இலங்கை இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.