இலங்கை ஒற்றையாட்சியின் ஜனநாயக மீறல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான உயர்நீதிமன்ற பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

ஒற்றையாட்சி அரசின் சட்டமா அதிபர் திணைக்களம் அவகாசம் கோரியது -கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு
பதிப்பு: 2018 நவ. 12 18:17
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 18:57
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இலங்கை ஒற்றையாட்சி உயர்நீதிமன்ற பரிசீலனை நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உள்ளிட்ட பன்னிரன்டு மனுக்கள் இன்று திங்கட்கிழமை காலை இலங்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அவசர மனுக்களாக எடுத்து விசாரிப்பதற்கு இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
 
அதனையடுத்து பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழாம் இதனை ஆராய்ந்தது.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட நேர விவாதத்தின் பின்னர் ஒற்றையாட்சி அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களம் கால அவகாசம் கோரியது. அதனையடுத்து மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நாளை வரை அமர்வை ஒத்திவைத்துள்ளது.

மனு மீதான பாிசீலனை நடைபெற்றபோது இன்று காலை முதல் கொழும்பு உயா் நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கட்சிகளின் ஆதரவாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அங்கு குழுமியிருந்ததால் நீதிமன்ற வளாகத்தில் இலங்கைப் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கட்சி ஆதரவாளர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டபோது அங்கு முறுகல் நிலை தோன்றியமை குறிப்பிடத்தக்கது.