இலங்கையின்

அரசியலமைப்புக்கு அமையவே மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் விளக்கம்

ஜனாதிபதிக்கு ஆதரவாக இன்று 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
பதிப்பு: 2018 நவ. 13 13:19
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 13 14:53
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அரசியலமைப்பில் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமையவே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் நலின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் இவ்வாறு விளக்கமளித்தார். இந்த மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
 
ஆகவே அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் இரண்டாவது பிரிவிற்கு அமைய, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறித்த அதிகாரத்தை, அரசியலமைப்பின் வேறு எந்தவொரு பிரிவும் அதனை கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளாதாக சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

எனவே அது அரசியலமைப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தற்போது அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கு 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுக்களை, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உதய கம்மன்பில, சட்டத்தரணி சீ. தொலவத்தை, பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோரால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றையதினம் நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக மேலும் ஐந்து மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.