இலங்கை அரசியல் நெருக்கடியின் இரண்டாம் பாகம்

உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இலங்கைத் தேசிய பாதுகாப்புச் சபையைக் கூட்டினார் மைத்திரி- முப்படைத் தளபதிகள் பங்கேற்பு

கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு- பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகமாட்டார்- நாமல்
பதிப்பு: 2018 நவ. 13 23:09
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 14 09:52
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இலங்கை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைத் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார். இன்றிரவு இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியேர் கலந்துகொண்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை அடுத்து நாளை புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்டிருந்த இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலின்படி நாடாளுமன்றம் நாளை கூடும் எனவும் சபாநாயரின் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை மைத்திரிபால சிறிசேன கூட்டி கலந்துரையாடியுள்ளார். ஆனால் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் எதுவுமே கூறவில்லை. அரச ஊடகங்களும் செய்தி எதனையும் வெளியிடவில்லை.

ஆனாலும் ஜனாதிபதி செயலக உயர்மட்டத் தகவல்கள் பாதுகாப்புச் சபைக் கூட்டம் இரவு இடம்பெற்றதாகக் கூறுகின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

அதேவேளை, நாடாளுமன்றம் கூட்டப்படுவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில், தேசிய பாதுகாப்புச் சபையை மைத்திரி கூட்டினாரா அல்லது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தேவைப்படும் போது இராணுவத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதா எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, வெளியுறவுச் செயலாளா் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகவுள்ளார் என்றும் மைத்திரியால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்கள் பதவி விலகலாம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் பதவி விலகல் தொடர்பாக மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக இன்று நள்ளிரவு வரை ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. எனினும், இது இடைக்காலத் தீர்ப்பு என்றும் நாடாளுமன்றத் தேர்தலை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்யவில்லை எனவும் மகிந்த அணியின் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மகிந்தவின் பிரதமர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த தினேஸ் குணவர்த்தன, உயர் நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானதல்ல என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு மாறனவை எனவும் நாளைய நாடாளுமன்ற அமர்வில் அனைவரும் கலந்துகொள்வார்கள் எனவும் நாமல் ராஜபக்ச தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவி வகித்தவேளை, அப்போதைய பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் அதிருப்பதியடைந்த பலர் விலக ஆரம்பித்தனர்.

இதனால் நாடாளுமன்றத்தைக் கூட்டமால் இரு வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற அமர்வு சந்திரிக்காவினால் ஒதிவைக்கப்பட்டிருந்தது. எனவே மாற்று நாடாளுமன்றம் ஒன்றை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கூட்டுவதற்கு முற்பட்டது.

ஆனால் நாடாளுமன்ற ஜயந்திபுர சந்தியில் இருந்து நாடாளுமன்ற வளாகத்துக்குள் எவரும் செல்ல முடியாதவாறு இலங்கைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக பதவி வகித்த அமரர் காமினி அத்துக்கோரள நாடாளுமன்றத்தை மீ்ண்டும் கூட்டவுள்ள போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

இந்தப் போராட்டத்தினால் நாடாளுமன்றத்தை சந்திரிக்கா கலைத்தார். டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பறியிருந்தது. ரணில் பிரதமராகப் பதவியேற்றார்.