அன்று தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தடா, பொடா! இன்று நூல் அழிப்பு தீர்ப்பு

"தமிழீழம் சிவக்கிறது" நூலை அழித்துவிடுங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஜனநாயகப்படுகொலை முதல் தமிழ்த்தேசிய எதிர்ப்பு வரை : எங்கே செல்கிறது தமிழகம்?
பதிப்பு: 2018 நவ. 15 04:50
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: நவ. 16 01:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களால் 1993 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, தமிழக காவல்துறையால் 2002 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட "தமிழீழம் சிவக்கிறது" என்ற நூலை அழித்துவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 1989 காலகட்ட ஈழப் போர் நிலவரம், தமிழீழத்தின் போராட்டம் மற்றும் அரசியல் வரலாறு, உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டே பழ.நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதியிருந்தார். 'இது தமிழீழம் குறித்தான வரலாற்று பொக்கிஷம்' என்று அன்றைய கால ஈழ ஆதரவாளர்களால் புகழப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் நாட்டில் வெளியிட அனுப்ப இருந்த தருவாயிலேயே அன்றையக் காலக்கட்டத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து வழக்குரைஞராக எதிர் கருத்து வெளியிட முடியாது எனினும் மேற்கண்ட நூல் குறித்தும் அது இன்றையச் சூழலில் ஏற்படுத்துவதாக கருதும் எதிர்மறை விளைவுகள் குறித்தும் இன்னும் தீர்க்கமாய் விசாரித்திருக்கலாம் என திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளரும் தமிழீழ ஆதரவாளருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கூர்மைக்கு கருத்துத் தெரிவித்தார்.

மேலும், "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ, தமிழீழத்திற்கு ஆதரவாகவோ பேசுவது, எழுதுவது, பிரச்சாரம் செய்வது இந்திய தேசத்திற்கு எதிரானவை அல்ல என்றும், அனைவருக்குமான அனைத்திற்குமான பேச்சுரிமை உறுதிசெய்யப்பட வேண்டும் என தடா, பொடா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன" எனவும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

"புத்தகங்களைத் திருப்பித் தருவதா? கூடாதா? என்ற நிலை எடுக்க வேண்டிய வழக்கில், புத்தகங்களை அடியோடு அழிக்கச் சொன்னது, இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒன்று. அப்படியானால், தளபதி ஹர்கிரத் சிங் எழுதிய புத்தகத்தை, இந்திய அரசு அழிக்கச் சொல்லுமா?" என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கேள்வி கேட்டுள்ளார்.

ஜெயலலிதா அம்மையாரின் மறைவின் பின்னர் பாஜகவின் கைப்பாவையாக தமிழக அரசாங்கம் மாறி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், "2017 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் தான் தொடர்ந்தும் தமிழீழ ஆதரவுக் கூட்டங்களுக்கும் ஆதரவுப் பிரச்சாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது" என தமிழக ஊடகவியலாளர் ஒருவர் கூர்மைக்கு கருத்து தெரிவித்தார்.

"மேலும், 2011 ஆண்டு முதல் மெரினா கடற்கரையில், மே 17 இயக்கம் ஒருங்கிணைத்து வந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வுக்கு 2017, 2018இல் தடை விதிக்கப்பட்டிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

வழக்கு விபரம்:

திரு பழ.நெடுமாறன் அவர்கள் மீதும், அவரது துணைவியார் (வெளியீட்டாளர்) மீதும், புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்த திரு சாகுல் அமீது மீதும், 1994இல் இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு 124 (ஏ) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 10 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 34, பிரிவு 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நூலுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழக காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு முடிந்த நிலையில், 2002-ம் ஆண்டு இந்நூலை மீண்டும் வெளியிடுவதற்கு முயற்சிக்கப்பட, பழ.நெடுமாறன் மற்றும் சாகுல் அமீது அவர்கள் இருவரும் 2002 ஏப்ரல் மாதம் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

2006-ல் பழ.நெடுமாறன் அவர்கள் மீதிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், புத்தகங்களின் மீதான தடை விலக்கப்படாமல் இருந்ததால், தமிழக காவல்துறை தொடர்ந்து அச்சிடவோ, தமிழகம், அயலகம் எங்கிலும் விநியோகிக்கவோ முடியாமல் இருந்து. இதனையடுத்து தன்னிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்த புத்தகங்களை திரும்ப தரக் கோரி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு பழ.நெடுமாறன் அவர்கள் வழக்கு தொடுத்திருந்தார்.

வெளிநாடுகளுக்கு இப்புத்தகங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், 2006-ல் வழக்கு வாபஸ் பெற்ற பின்னரும் காவல்துறையின் பிடியில் தன் புத்தகங்கள் இருப்பதால் எந்த பயனும் இல்லை எனவும் பழநெடுமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பு முன்வைத்த எதிர் வாதத்தில், "இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், ராஜீவ் காந்திக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் புத்தகத்தில் கருத்துக்கள் உள்ளன" என்றும் "புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்" என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டிருந்தது.

2006 முதல் பல்வேறு கட்ட வழக்கு விசாரணைகளின் பொழுதும் தொடர்ந்தும் புத்தகத் திற்கான தடை உறுதிசெய்யப்பட்டே வந்தது.

கார்த்திகை 14, 2018 அன்று மேற்கூரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார். அதில், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதால் பழ.நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி காவல்துறையின் பாதுகாப்பில் உள்ள "தமிழீழம் சிவக்கிறது" புத்தகங்களை அழித்துவிடவும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.