இலங்கையின் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிநாடுகள் அதிருப்தி

நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்- கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின் சபாநாயகர் அறிவிப்பு

இன்று மாலை கலந்துரையாடலுக்கு வருமாறு சபாநாயகருக்கு மைத்திரி அழைப்பு
பதிப்பு: 2018 நவ. 15 13:51
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 15 17:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய நாடாளுமன்றம் நாளை 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30க்கு கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற களோபரத்தை அடுத்து எதுவித அறிவித்தலுமின்றி சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றிருந்தார். இதன் பின்னர் கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை ஐந்து மணிக்கு சபாநாயகர் கருஜயசூரியவுடன் ஜனாதிபதி செயலகத்தில் அவசர சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களையும் இந்த சந்திப்பிற்கு சிறிசேன அழைத்துள்ளதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடிதடி குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் கொள்கைகளிற்கு முரணான விடயம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டெசெதர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் என்பது ஸ்தாபனங்களிற்கு மதிப்பளிப்பது என்பது என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கையில் காணப்படும் அரசியல் சூழ்நிலை ஆழ்ந்த கவலையளிக்கின்றது என அவர் தனது ருவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.