முடிவின்றித் தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

பிரதான அரசியல் கட்சிகளுடன் மைத்திரி - மகிந்த சந்திப்பு, ரணில் ஆதரவாளர்கள் கொழும்பில் பேரணி

பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்த இணக்கம் - ஆனால் மகிந்த தரப்பு விரும்பவில்லை
பதிப்பு: 2018 நவ. 15 21:50
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 15 22:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை அரசியல் நெருக்கடி நீடித்துச் செல்லும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான அரசியல் கட்சித் தலைவர்களோடு கலந்துரையாடி வருகின்றார். இன்று மாலை இடம்பெற்ற இரண்டு சந்திப்புக்களிலும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான சிறிய கட்சிகள் கலந்துகொண்ட சந்திப்பில், நாடாளுமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களும் ஊடகங்களுக்கு கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
 
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மாத்திரமே கருத்துக் கூறினார். அதுவும் முக்கியமான விடயம் ஒன்று இருப்பதாகவும் ஆனாலும் அதனை தற்போது கூற முடியாதெனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்போடு இன்று இரவு இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் எவரும் கருத்துக் கூறவில்லை.

ஆனாலும் நாடாளுமன்றத்தில் அமைதியை ஏற்படுத்தும் விடயத்தில் இணக்கம் ஏற்பட்டது எனவும் பிரதமர் பதவி விவகாரம் தொடர்பாக எதுவுமே பேசப்படவில்லை எனவும் மகிந்த தரப்பு உறுப்பினர் டிலான் பெரேரா மாத்திரமே கருத்துக் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டார் என்றும் நாடாளுமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெறுவார் எனவும் மகிந்த தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், ஆதரவு தெரிவிக்கும் உறு்ப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களின் குரல் வாக்குகள் பதியப்பட வேண்டுமென மைத்ரிபால சிறிசேன இரண்டு சந்திப்புக்களிலும் கூறியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று இரவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவும் தனது ஆதரவு உறுப்பினர்களோடு இன்றிரவு கலந்துரையாடியுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற பேரணியில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

மைத்திரி - மகிந்த ஆகியோருக்கு எதிரான சுலோக அட்டைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியால் கொழும்பில் இரவு ஒன்பது மணிவரையும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.