இந்தியாவைத் தொடர்ந்து இலங்கையிலும்

கஜா சூறாவளி- வடமாகாணத்தை ஊடுருவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை-பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
பதிப்பு: 2018 நவ. 15 22:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 00:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் வடக்கே காங்கேசன்துறையிலிருந்து சுமார் 325 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா சூறாவளி மேற்கு சார்ந்து தென்மேற்கு திசையினூடாக நகர்ந்து செல்லவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் இது வடக்கு கரையிலிருந்து சுமார் 120 கிலோமீற்றர் தொலைவுக்கு அப்பால் நகர்ந்து தமிழ் நாட்டின் தென் கரையை ஊடறுத்து செல்லும். இதன் தாக்கத்தினால் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும், அத்துடன் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யக் கூடும்.
 
யாழ்ப்பாணத்தில் குடாநாட்டில் மணித்தியாலத்திற்கு 80 தொடக்கம் 90 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக வட மாகாணத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

புத்தளம், மன்னார், திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்றானது 100 கிலோ மீற்றர் வரை உயரக் கூடும். மேலும் யாழ்ப்பாணத்தில் நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் 150 மில்லி மீற்றரிலும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும்.

இவ்வாறு காற்றின் வேகம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தழிப்புடன் காணப்படும். அத்துடன் முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புக்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணம் கரையோரப் பகுதிகளான காரைநகர். மாதகல் மற்றும் தீவுப்பகுதியான ஊர்காவற்துறை. வேலனை பிரதேசங்களில் கடும் காற்று வீச ஆரம்பித்துள்ளதுடன் மழையும் பெய்வதாக மக்கள் கூறுகின்றனர்.

தென்மரட்சியில் சாவகச்சேரி. பளை பிரதேசங்களில் கடும் காற்றும் மழையும் ஆரம்பித்துள்ளதாகவும் இது நள்ளிரவு ஒரு மணிக்குப் பின்னர் மேலும் அதிகரிக்கும் எனவும் இலங்கை வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்படும் மக்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அருகில் உள்ள ஆலயங்கள் பாடசாலைக் கட்டடங்களில் தங்க முடியும் என்றும் நிவாரண உதவிகளை வழங்க தயாராகவுள்ள தெண்டர்கள் கூறியுள்ளனர்.

மின்சார சபை, தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக யாழ் மாநாகர சபை ஆணையாளயர் ஜெயசீலன் கூறியுள்ளார்.

அதேவேளை இரவு 11 மணியி்ன் பின்னர் கூடுதலாக காற்று வீசுவதுடன் மழையும் அதிகரித்துள்ளதால் சுன்னாகம், பண்டத்தரப்பு, சாவகச்சேகரி மற்றும் காரைநகர் உள்ளிட்ட தீ்வுப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள தொண்டர்கள் கூறுகின்றனர்.