இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடி

இன்று மதியம் கூடுகின்றது நாடாளுமன்றம் - மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு

இறுதித் தீர்மானம் குறித்து கட்சிகள் தனித்தனியாக கலந்துரையாடல்
பதிப்பு: 2018 நவ. 16 10:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 11:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அடிதடி மோதலையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று இலங்கை நேரப்படி மதியம் 1.30க்கு கூடவுள்ளது. இன்றைய இந்த அமர்வில் நாடாளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவால் நேற்றைய சம்பவம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களும் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் பிரதமர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், இன்று அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
 
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று சபாநாயகர், கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபை கூடுகின்ற போது மேற்படி வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இன்று காலை 9 மணிக்கு அவசரமாகக் கூடுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் இன்று காலை 10 மணிக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.