நீடித்து வரும் இலங்கை அரசியல் நெருக்கடி

நாடாளுமன்றத்தைக் கூட்டவிடாமல் மகிந்த தரப்பு அட்டகாசம்- பொலிஸாரின் பாதுகாப்புடன் சபைக்குள் சபாநாயகர்

மிளகாய்த் தண்ணி வீசப்பட்டது- மோதலுக்கு மத்தியிலும் மகிந்தவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்
பதிப்பு: 2018 நவ. 16 14:10
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 18:49
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை 1.30க்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்கள் சபைக்குள் முன்னதாகவே சென்று சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடியுள்ள நிலையிலேயே மகிந்த ராஜபக்ச தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய அமா்வின்போது நாடாளுமன்றத்திற்குள் கத்தியோடு வந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியே மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மகிந்த தரப்பு அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதுடன் அவரைச்சுற்றி ஏனைய அனைவரும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரிய இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட போதும் மகிந்த தரப்பு உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.

பொலிஸ்
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற கைகலப்பில் பாதுகாப்புக்குச் சென்ற இலங்கைப் பொலிஸார் மீதும் மகிந்த தரப்பு உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த பொலிஸார் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். இன்று நாடாளுமன்றம் கூடும்போது குழப்பம் ஏற்படாது என்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட இடமளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்திருந்தார். நாடாளுமன்றத்தை இனிமேல் ஒத்திவைக்கமாட்டேன் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கையில் கிடைத்த பொருட்கள் மற்றும் கதிரைகளால் சபாநாயகரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இனால் தனது ஆசனத்தை நெருங்க முடியாத நிலையில் சபாநாயகர் செங்கோலுடன் வெளியேறி்ச் சென்றுள்ளதாக நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெருமளவு இலங்கைப் பொலிஸாரும் முப்படையினரும் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை மகிந்த தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது மிளகாய்த் தண்ணி வீ்சியுள்ளனர். இதனால் உறுப்பினர் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற கைகலப்பில் பாதுகாப்புக்குச் சென்ற இலங்கைப் பொலிஸார் உட்பட ரணில் தரப்பு உறுப்பினர்கள் சிலரும் மகிந்த தரப்பு உறுப்பினர்களினால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றார். நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின்போதும் ஏற்பட்ட கைகலப்பில் உறுப்பினர் ஒருவர் காயமடைந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகா் கரு ஜயசூரிய பொலிஸாரின் பாதுகாப்புடன் சபையின் ஓரமாக நின்று கொண்டு அறிவித்தார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி நண்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவில் நம்பிக்கை இல்லை என்பது மூன்றாவது தடவையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.

அவரால் பிரதமர் பதவி வகிக்க முடியாது. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அவ்வாறு அவர்கள் விலகாவிட்டால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாக கருதப்படுவர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் நாடாளுமன்றக் கட்டடத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறினார்.