முடிவின்றித் தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

சபாநாயகர் கரு ஜயசூரியவின் கடிதத்தை நிராகரித்தார் மைத்திரி - ரணிலை பிரதமராக ஏற்க முடியதெனவும் தெரிவிப்பு

மூன்று தடவையும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய நிலையிலும் மகிந்த பிரதமர்
பதிப்பு: 2018 நவ. 16 22:09
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 22:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடுமையான தீர்மானங்களினால் அரசியல் நெருக்கடி நீடித்துச் செல்கின்றது. மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருப்பதற்குரிய பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்றும் ஆகவே புதிய அரசாங்கத்தை அமைக்குமாறும் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் எழுதிய கடிதத்தையும் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இன்றிரவு கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், நாடாளுமன்றம் ஒழுங்கான முறையில் நடைபெறாமல் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாதென மைத்திரி கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஒருபோதும் ஏற்க முடியாதனவும் மைத்திரி கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவே இலங்கையின் பிரதமர் என ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியின் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களை மதிக்கவில்லை என்றும் சர்வாதிகாரமாகச் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை இரவு ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் பங்காளிக் கட்சிகளையும் மைத்திரி சந்திப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பும் இடம்பெறவில்லையென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததில் இருந்து ஆரம்பித்த அரசியல் நெருக்கடி, இன்று 21 நாளாகத் தொடருகின்றது.

இதேவேளை, நாடாளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிரான வழக்கை அரசியல் யாப்பு விவகார வழக்காக மாற்றி நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கை கட்சிகளின் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே ஐக்கியதேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தாக்கல் செய்திருந்தன.

அதனால் விசாரணையின் போது மூன்று நீதியரசர்கள் மாத்திரமே அந்த மனுக்களை விசாரணை செய்தனர். ஆகவே எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி ஆரம்பமாகவுள்ள அந்த மனுக்கள் மீதான விசாணைக்கு குறைந்தது ஏழு நீதியரசர்களை நியமிக்குமாறு வலியுறுத்தி பேராசிரியர் பிீரிஸ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்குப் பின்னரான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 4, 5, 6 ஆம் திகதிகளில் நடைபெற்று ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.