இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னரான நிலையில்

பதினொரு தமிழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட விசாரணையை நடத்திய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

மகிந்த பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இலங்கைப் பொலிஸ் பிரிவுகளில் மாற்றம்
பதிப்பு: 2018 நவ. 18 23:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 19 10:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மகிந்த ராஜபக்சவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கொலை, கடத்தல், அச்சுறுத்தல் ஆகிய முக்கிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா காரணமின்றி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் பதவியேற்றவுடன் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற அதிகார துஸ்பிரயோகங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை விசாரணை நடத்துவதில் நிசாந்த சில்வா ஈடுபட்டிருந்தார்.
 
குறிப்பாக ஐந்து மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கொழும்பில் கடத்திக் கொலை செய்யப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க வசீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகளை நிசாந்த சில்வா நடத்தி வந்தார்.

ஆனால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் நிசாந்த சில்வா உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

2006 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கொழும்பில் கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் இலங்கை முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன முக்கியமான எதிரியாகவுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களை திரட்டுவதிலும் அவரைக் கைதுசெய்ய வேண்டும் என கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததிலும் நிசாந்த சில்வா முக்கிய பங்கு வகித்திருந்தார்.

ஐந்து மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கொழும்பில் கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான பிரதான எதிரியான நேவி சம்பத் தொடர்பான முக்கிய ஆதாரங்களை நிசாந்த சில்வா திரட்டியிருந்தார்.

இந்த நிலையில் அவரது இடமாற்றம் அமைந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, இந்த விழக்கு விசாரணைகளில் இலங்கை முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன கைதுசெய்யப்படுவதை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் விரும்பியிருக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி பதவிக்கு வந்திருந்தாலும் மைத்திரி - ரணில் அரசாங்கம் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகாக்களை போர்க்குற்ற விசாரணை, ஈழத் தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு விடயங்களில் விசாரணை நடத்துவதை தவிர்த்து வந்தது.

குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் பிரகாரம் போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைப் படையினரை உட்படுத்துவதை விரும்பவில்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இலங்கை முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தனவை பதினொரு தமிழர்கள் கடத்தல் விடயத்தில் கைதுசெய்ய அனுமதிக்கப்ப போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும் மறைமுகமாகக் கூறி வந்தது.

ரவீந்திர குணவர்த்தனவைக் கைதுசெய்ய அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவைக் கூட்டத்தில் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

போர்க்குற்ற விசாரணை இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை மைத்திரியோ, ரணில் விக்கிரமசிங்கவோ நடத்தப்பபோதில்லையென வடமாகாண முன்னாள் முதலமைச்சா் விக்னேஸ்வரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.