தமிழகக் காவல்துறையினரின் உரிமை மீறல்களா? சட்ட விதிமுறை மீறல்களா?

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு!

சட்டரீதியாகவும் மக்களின் துணையோடும் முறியடிப்போம் - மே17 இயக்கம் அறிவிப்பு
பதிப்பு: 2018 நவ. 19 06:59
புதுப்பிப்பு: நவ. 19 15:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு தமிழகம் திரும்பிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கடந்த ஓகஸ்து மாதம் 9 ஆம் நாள் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். 55 நாட்கள் சிறை வாசத்தின் பின்னர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார். சென்னை காவல்நிலையத்தில், நாள்தோறும் கையெழுத்து இட்டு வரும் திருமுருகன் காந்தி மீது பல மாதங்களுக்கும் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசியதை குறிப்பிட்டு வழக்கு பதியப்பட்டுள்ளதாக மே17 இயக்கம் தெரிவித்துள்ளது! ஓக்டோபர் 4 ஆம் நாள் சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி கடுமையான உடல்நலக்குறைவின் காரணமாக, மருத்துவமனையில் தங்கி சில நாட்கள் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
 
ஸ்டெர்லைட் விவகாரம், பசுமை வழிச்சாலை உள்ளிட்ட தமிழகப் பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையில் பேசியதோடு, ஈழத்தமிழர் நலன் சார் அரசியல் வேலைப்பாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளில் ஈடுபட்டுவிட்டு, தமிழகம் திரும்பிய வேளையில், கருநாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். (இதுகுறித்து, கூர்மை செய்தித்தளம் உடனடியாக வழக்குரைஞர்களின் கருத்துக்களுடன் செய்தி வெளியிட்டது நினைவு இருக்கலாம்).

பின்னர் பெங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்டு, ஆகஸ்ட் 10 அன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஐ.நாவில் தூத்துக்குடி படுகொலை குறித்து திருமுருகன் காந்தி பேசியதை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாகவும், இதனால் மக்களை போராடத் தூண்டியதாகவும் போடப்பட்ட அந்த வழக்கில், திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது என உடனடியாக நீதிபதி மறுத்து விட்டார்.

விடுதலை செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை தமிழக காவல்துறை உடனடியாக மீண்டும் கைதுசெய்தது. அப்பொழுது, ராயப்பேட்டை பெரியார் சிலைக்கு 2017 செப்டெம்பரில் மாலை போட்டதற்கு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டு, சிறையின் முதல் 16 நாட்களில் 17 வழக்குகள் போடப்பட்டன எனவும் மே17 இயக்கம் தனது ஊடக சந்திப்பில் விளக்கம் அளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே போடப்பட்டிருந்த 13 உட்பட 30 வழக்குகள், அதில் 4 தேசத்துரோக வழக்குகள், ஒரு ஊபா (UAPA)வழக்கு அவர் மீது போடப்பட்டன என்றும் தமிழக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையின் பொழுது, சுகாதாரமற்ற அறை, உணவு என பல்வேறு உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகி, உடல் நிலை பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர், நிபந்தனை பிணையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் நாள் வெளி வந்த திருமுருகன் சில நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சையிலும் இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது, நிபந்தனை பிணையில் சென்னையில் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வரும் திருமுருகன் காந்தி மீது மீண்டும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மே17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"கடந்த ஏப்ரல் மாதம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியை எதிர்த்து, போராட்டம் நடத்தியதாக தோழர் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்து இன்று(17-11-2018) சம்மன் அனுப்பியிருக்கிறது காவல்துறை.

ஸ்டெர்லைட் படுகொலையை ஐ.நாவில் பேசியதாக, ஆகஸ்ட் 9 ஆம் திகதி திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டு ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு, ஒவ்வொரு வழக்காக பிணை பெற்று 55 நாட்கள் கழித்து விடுதலையானார்.

சிறையிலிருந்து வெளிவந்து 16 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் கடந்த ஒரு மாத காலமாக Condition Bail காரணமாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற போராட்டத்திற்கு இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.

சாதி ஆணவப் படுகொலைகளையும், ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் மீதான தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத இந்த அரசுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினைக் காக்க போராடியதாக வழக்கு பதிவு செய்கிறது என்றால், இந்திய அரசும், தமிழக அரசும் சாதி வெறிக்கு துணைபோகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

சிறைக்குப் பின்னரும் மே பதினேழு இயக்கம் சமரசமின்றி நிற்பதால், மேலும் அடக்குமுறையை தொடர்ச்சியாக அரசு ஏவிவருகிறது. இந்த அடக்குமுறைகளையெல்லாம் சட்டரீதியாகவும், மக்கள் துணையோடும் எதிர்கொண்டு மே பதினேழு இயக்கம் தொடர்ந்து சமரசமின்றி இயங்கும் என்பதை மோடி அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்."