பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடிய

இலங்கை நாடாளுமன்றம் 4 ஆவது தடவையாக ஒத்திவைப்பு - மகிந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை

ஏழு நிமிடங்கள் மாத்திரமே சபை அமர்வு இடம்பெற்றது - உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரை இழுத்தடிக்கத் தீர்மானம்
பதிப்பு: 2018 நவ. 19 13:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 19 14:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடிய இலங்கை நாடாளுமன்றம் 4 ஆவது தடவையாக இன்று 7 நிமிடத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் நிலவிவரும் நெருக்கடியை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதன்போது தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான அறிவித்தலை பிரதி சபாநாயகர் விடுத்தார். இதனையடுத்து தெரிவுக் குழுவின் உறுப்பினர்களது எண்ணிக்கையில் அதிகளவானவர்கள் தங்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணர்வதன வலியுறுத்தினார்.
 
ஆனால் அதிக எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த தரப்புக்கு இருக்கிறதோ? அதன் அடிப்படையிலான விகிதாசாரத்தின்படியே தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர் தெரிவு அமைய வேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

மேலும் நாடாளுமன்றத்திலேயே இன்னும் பெரும்பான்மை எந்த தரப்புக்கு என்பது நிரூபிக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் சபையில் அமளி அதிகரித்த நிலையில் பிரதி சபாநாயகரால் நாடாளுமன்றை எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் வேறு குழப்பங்கள் காரணங்களைக் கூறி நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதற்கான அழுத்தங்களை கொடுத்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடினாலும் இன்றைய தினத்திலிருந்து பாரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறும் அமர்வின் போது பெரும்பாலும் தற்போது நிலவும் நெருக்கடிக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை ஆதரவுள்ள ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கட்சிகத் தலைவர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்திருந்தார்.

ஆனால் இன்று மீ்ண்டும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாம் திகதி உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை நாடாளுமன்ற அமர்வை இவ்வாறு ஒத்திவைக்க மகிந்த தரப்பு திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை, பொதுத் தேர்தலுக்கு செல்வதன் மூலமே இலங்கை அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என மகிந்த தரப்பு மக்கள் மத்தியில் பிரசாரங்களை செய்து வருகின்றது.

பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் பெத்த பிக்குமார் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.