யாழ்ப்பாணம்

நாவாந்துறை மீனவரது படகு தீக்கிரை - வாழ்வாதாரத்தைக் கொண்டுநடத்த முடியாது நிர்க்கதி

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நெருக்கடிக்கு ஆளாவதாக மீனவர்கள் விசனம்
பதிப்பு: 2018 நவ. 20 11:49
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 20 11:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மீன்பிடியை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் புரிந்துவரும் நிலையில் யாழ்ப்பாணம் - நாவந்துறையைச் சேர்ந்த மீனவர் ஒருவரது மீன்பிடிப் படகு ஒன்று அடையாளந் தெரியாதோரால் எரியூட்டப்பட்டுள்ளது. அன்ரன் சிலுவைதாசன் என்பவருக்குச் சொந்தமான 3 இலட்சம் ரூபா பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே நேற்றுமுன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 
மீன்பிடியை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள தமக்கு ஆதாரமாக விளங்கிய படகு எரியூட்டப்பட்டுள்ளதனால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்வதற்கு தாம் பெரிதும் அல்லலுறுவதாக பாதிக்கப்பட்ட மீனவர் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பும் கேரதீவு இறங்குதுறையில் 3 படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டதாகவும், மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்னர்.

இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவருக்கு உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்றும் நாவாந்துறை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் விடுதலைப்புலிகளின் காலத்தில் தாம் எவ்வித நெருக்கடியையும் எதிர்நோக்கியிருக்கவில்லை என குறிப்பிடும் மீனவர்கள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென்னிலங்கை மீனவர்களாலும் இந்திய மீனவர்களாலும் தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாவதுடன் அச்சத்துடன் தொழில் புரிய வேண்டியிருப்பதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.