இலங்கை முப்படைகளின் பிரதானி

தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கின் சாட்சிக்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு

நிசாந்த சில்வா புலிகளுடன் தொடர்புடைவர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்
பதிப்பு: 2018 நவ. 26 23:38
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 09:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போர்க் காலத்தின் போது கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் பிரதான சாட்சியான, இலங்கைக் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தாக்கியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் அவரது சகாக்களான ஆறு கடற்படை அதிகாரிகளும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வழக்கின் பிரதான சந்தேக நபரான இலங்கைக் கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் துப்பாக்கியைக் காண்பித்து சுட்டுவிடுவேன் என்று அச்சுறுத்தியதாக கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில், வழக்கின் பிரதான சாட்சியான லெப்.கொமாண்டர் லக்சிறி என்ற கடற்படை அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன, இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க் காலத்தின்போது 2006 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளை விசாரித்து வரும், இலங்கைப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறியிருந்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அதிகார துஸ்பிரயோகம், ஊழல் மோசடி மற்றும் கொலைகள் குறித்து நிசாந்த சில்வா விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில், பொறுப்புவாய்ந்த பொலிஸ் அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன வலியுறுத்தியுள்ளார்.