இலங்கையின் மலையகப் பகுதிகளில்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்

ரயர்கள் எரிக்கப்பட்டதனால் போக்குவரத்து ஸ்தம்பிதம்
பதிப்பு: 2018 நவ. 26 16:20
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 26 16:30
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக திகழும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வேதனத்தை 1000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி மனித சங்கிலிப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தலவாக்கலை, அக்கரப்பத்தனை, லிந்துலை, டயகம, மன்ராசி, ஹோல்புரூக் உள்ளிட்ட தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தோட்ட மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தலவாக்கலையிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதாக அப்பிரதேச வியாபாரிகள் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தனர்.
 
கண்டி - கெலாபொக்க, டீ மலை, சோளங்கந்த, அலகொல, கலகிரிய, எலுகஸ், நடுக்கணக்கு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட தோட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்கள் இவ்வாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புநிற ஆடைகளை அணிந்து, கறுப்பு நிற துணிகளை தலையில் அணிந்த வண்ணம் மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

மாத்தளை மாவட்டத்தின் றத்தோட்டை, நடுத்தோட்டம், பம்பரகல உள்ளிட்ட தோட்டங்களிலும் மக்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் 1,000 ரூபா சம்பளத்தைக் கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நடுத்தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலிருந்து பேரணியாக சென்ற மக்கள், ரிவர்ட்ஸ்டன் பாலம் வரை சென்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இனால், சுமார் 2 மணித்தியாலங்கள் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன்போது டயர்கள் எரிக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நுவரெலியா - கந்தபொல, பார்க் தோட்டம், கொங்கோடியா கோட்லோஜ், எதர்செட், எஸ்கடேல், நோனா தோட்டம், சமர்ஹில் உள்ளிட்ட தோட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தபொல நகரிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் பெருந்தோட்ட மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வர்த்தக நிலையங்களிலும் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேநேரம், மஸ்கெலியா நகரிலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பளத்தைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

சாமிமலை, மறே, நல்லதண்ணி, லக்ஸபான, ப்ரவுன்லோ ஆகிய தோட்டங்களிலும் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, கம்பளை - புசல்லாவ, காலி - ஹினிதும பகுதிகளிலுள்ள தோட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது சம்பளக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திவருகின்ற போதிலும் இதுவரை எவ்வித தீர்வும் உரிய தரப்பினரால் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

அத்துடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை அடுத்து பெருந்தோட்ட தொழிலாளர்களது போராட்டம் மழுங்கடிக்கப்பட்ட போதிலும் மக்கள் தமது கோரிக்கையிலிருந்து பின்வாங்காது தமது கோரிக்கையை முன்வைத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.