இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடி

மகிந்த தரப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தது - அரசாங்கம் செயலிழந்துள்ளதாக ரணில் தரப்பு சபையில் விளக்கம்

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பளம் வழங்குவதில் சட்டப் பிரச்சினை - மங்கள
பதிப்பு: 2018 நவ. 27 13:56
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 14:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சபாநாயகர் கருஜயசூரிய நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப்போவதில்லை என நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மையப்படுத்திய மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நிலவிவரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
 
இதன்போது சபை அமர்வைப் புறக்கணித்து வெளியேறிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி தாம் பங்கேற்காமைக்கான காரணத்தை தெரிவித்தனர்.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது வடிவேல் சுரேஸ் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை சபாநாயகரிடம் முன்வைத்தார்.

மக்கள் பிரதிநிதியான தனக்கு உரிய பாதுகாப்பு இல்லை. சபையில் மிளகாய்த் தூள் தாக்குதல் நடத்தப்படுகின்றது. பதுளையில் கூட்டத்துக்கு சென்றால் அங்கு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்த சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். பொலிஸில் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கை இல்லை. முறைப்பாட்டை கணக்கில் எடுக்காத அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, எனக்காக வீதியில் இறங்கி போராட மக்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று தனது ஒழுங்குப் பிரச்சினையில் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு எதிர்வரும் சனிக்கிழமைக்கு முதல் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலை தொடர்ந்தால் ஜனவரியில் இருந்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் முதல் கொடுப்பனவு வழங்குவதில் பிரச்சினை வரலாம் என தெரிவித்ததுடன், சட்டபூர்வ அரசை அமைக்க சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரினார்

ஜனாதிபதி மைத்திரியைக் கொலை செய்வதற்கு தான் முயற்சிக்கவில்லை எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா பொலிஸ் மா அதிபரை அழைத்து 48 மணி நேரத்துக்குள் இது பற்றி விசாரிக்க சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சபாநாயகர் தலையிட வேண்டுமென உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரிக்கை விடுத்தார்.

அரசு இல்லையென்று அறிவிக்கப்பட்ட பின்னர் நிதியமைச்சு இயங்குவது எப்படி? அதன் கடித தலைப்புக்களில் எப்படி கடிதங்களை அனுப்புவது? அரச ஊடகங்கள் மக்கள் பணத்தை செலவிடுவது குறித்து விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கோரிக்கை விடுத்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரதமர் மட்டும் அமைச்சரவை இயங்குவதாக செய்திகள் வருவது சிறப்புரிமைகள் மீறும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் முறையாக இடம்பெறாத காரணத்தினால் நவம்பர் 14 முதல் 23 வரை நடந்த சபை அமர்வுகள் தொடர்பான நாடாளுமன்ற ஹன்சார்ட் அறிக்கை வெளியிடுவதை நிறுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.