மகிந்த பிரதமராகப் பதவியேற்ற பின்னரான நிலையில்

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்ட விவாகாரம் குறித்த விசாரணை தொடர்கிறது
பதிப்பு: 2018 நவ. 27 16:22
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 16:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இரண்டாவது தடவையாகவும் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் முன்னிலையாக வேண்டும் என கூறப்பட்டிருந்தபோதும் அவர் மெக்சிக்கோ நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமையும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன முன்லையாகவில்லையென இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
கொழும்பில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை, பாதுகாத்து பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்ல ஐந்து இலட்சம் ரூபா வழங்கியதாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய்ப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. நாளை புதன்கிழமையும் விசாரணை நடபெறவுள்ளது.

அந்த விசாரணையின்போது அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளையும் முன்லையாகத் தவறினால் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்துமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அதிகாரத் துஸ்பிரயோகம் மற்றும் நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் மீதான ஊழல் மோசடி பற்றிய விசாரணைகள் கொழும்பில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த விசாரணைகள் மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல விசாரணைகளை நடத்தி வரும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷந்த டி சில்வா இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளித்திருந்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் நிஷாந்த டி சில்வா உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் இலங்கைப் பொலிஸ் சேவை ஆணைக்குழு அந்த இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்திருந்தது. விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாக நிஷாந்த டி சில்வா, ரணில் விக்கிரமசிங்கவினால் 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் பிரதான சாட்சியான, இலங்கைக் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே என்பவரை சென்ற ஞாயிற்றுக்கிழமை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தாக்கியுள்ளதாக முறையிடப்பட்டிருந்ததது.