இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தை சர்வதேசம் நம்ப வேண்டும் என்ற நோக்கில்

அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன கைது - அரசியல் நெருக்கடியிலும் பௌத்த தேசியத்துக்கான ஒற்றுமை

முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சர்வதேச சமூகத்தை நம்பவைக்கும் முயற்சி
பதிப்பு: 2018 நவ. 28 15:51
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 28 16:45
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று புதன்கிழமை இலங்கை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசியல் நெருக்கடி விவகாரங்களில் இந்தியா, மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை அரசியல் யாப்பை மீறிச் செயற்படுகின்றார் எனவும் இலங்கை நீதித்துறை சுயாதீனமாக செயற்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் 2006ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கொழும்புக் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணையின்போது அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன முன்னிலையாக மறுத்திருந்தார்.

கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற விசாரணையின்போது அவர் மெக்சிக்கோ நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று புதன்கிழமை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன முன்னிலையாக வேண்டும் எனவும் இல்லையேல் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் இலங்கை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை பிணையில் விடுதலை செய்வதற்கு அவருடைய சட்டத்தரணிகள் முயற்சி எடுத்துள்ளதாக கொழும்புச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

கொழும்பில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை, பாதுகாத்து பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்ல ஐந்து இலட்சம் ரூபா வழங்கியதாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த விவகாரம் ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் முக்கியமாகப் பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளும் மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கும் திருகோணமலைக் கடற்படைத் தளத்திற்கும் சென்றிருந்தனர்.

மைத்திரி மகிந்த ரணில் ஆகிய முன்று தரப்புகளும் பாரியதொரு அரசியல் நெருக்கடியைச் சந்தித்து அரசாங்கத்தையே கொண்டு நடத்த முடியாத நிலையில் தவிக்கின்றனர்.

ஆனாலும் இலங்கையின் நீதித்துறையும் இலங்கை அரசியல் யாப்பும் தமிழர் பிரச்சினையில் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படுகின்றது என்பதை சர்வதேசம் நம்பும் அளவுக்கு சிறந்த மூலோபாயத்தோடு செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொிவித்துள்ளார்.

அதேவேளை, போர்க்குற்ற விசாரணையை இல்லாமல் செய்வதும் தமிழ் இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுகொள்ளக் கூடாது என்பதிலும் இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகள் அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒன்றித்துச் செயற்படுவதாக அவதானிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அரசியல் யாப்பு, இலங்கை நீதித்துறை செயற்பாடுகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுமாறும் சர்வதேசப் பிரமானங்களுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் எனவும் பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.