தொடரும் அரசியல் நெருக்கடி

பிரதமர் நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரியுடன் ரணில் தரப்புக்கு இணக்கம் ஏற்படவில்லை - தொடரும் இழுபறி

நாடாளுமன்றத் தேர்தலே ஒரு வழி என்கிறார் மகிந்த
பதிப்பு: 2018 டிச. 02 16:25
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 17:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்ந்தும் நீடித்துச் செல்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஞாயிற்றுக்கிழமை ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சந்திப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன மீண்டும் கூறியுள்ளார். இதனால் மைத்திரியைச் சந்திப்பில் பயனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். அதேவேளை, பெரும்பான்மை அதிகாரங்கள் இல்லாத நிலையில் கூட பல நாடுகளில் அரசாங்கங்கள் செயற்படுவதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அரசியல் நெருக்கடி குறித்து அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
 
நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததால் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என்றும் மகிந்த ராஜபக்ச அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தலே முக்கியமானது என்றும் மக்களின் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிக்கட்டும் எனவும் அந்த அறிக்கையில் மகிந்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் அதிகாரபூர்வ கடிதம் ஒன்றை, ஜனாதிபதி மைத்திரிக்கு நேற்று இரவு அனுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் கட்சியில் இருந்து வேறு ஒருவரின் பெயரைத் தர முடியாதெனவும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

கடிதத்தின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் மகிந்த பதவி விலகக் கூடாது எனவும் ஏழாம் திகதி இலங்கை உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை மகிந்த பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய பேச்சுக்களில் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மைப் பலம் இல்லை என்பதை மைத்திரி ஏற்றுக் கொண்டார் எனவும் ஆனாலும் மகிந்தவை பதவி விலக்கும் நோக்கம் மைத்திரிக்கு இல்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.