மேலும் குழப்பமடைந்து வரும் இலங்கை அரசியல் நெருக்கடி

நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் பின்னரும் ரணிலைப் பிரதமராக்க முடியாது என்கிறார் மைத்திரி- சட்டமா அதிபருடன் ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்க்கும் மைத்திரி- மகிந்தவுக்கு நல்ல படிப்பினை என்கிறார் சம்பந்தன்
பதிப்பு: 2018 டிச. 04 00:22
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 04 09:04
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். மகிந்த பிரதமராகப் பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் திங்கட்கிழமை வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு மைத்திரிபால சிறிசேவைச் சந்தித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
 
ஆனால் ரணிலைத் தவிர வேறு ஒருவரின் பெயரைத் தருமாறு மைத்திரி கேட்டுக்கொண்டார் என்றும் ஆனால் அதனை நிராகரித்த பின்னர் சந்திப்பில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இனிமேல் மைத்திரியைச் சந்திப்பதில் பயனில்லை என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் இலங்கைச் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நேற்றுத் திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாகச் சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்புக் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.

ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்புக் குறித்தும் அது தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் தொடர்பாகவும் மைத்திரி விளக்கமளித்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பு மேன்முறையி்ட்டு நீதிமன்ற இடைக்காலத் தீா்ப்புக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்ய மகிந்த தரப்பு எற்பாடு செய்து வருகின்றது.

அவ்வாறானதொரு நிலையில் மைத்திரி சட்டமா அதிபரைச் சந்தித்துள்ளார்.

அதேவேளை. உயர் நீதிமன்றத்தைவிட இலங்கை நாடாளுமன்றமே மீயுயர் அதிகாரம் கொண்டது என சட்ட வியாக்கியானம் கொடுக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற முறையில் ஏழு நீதியரசர்களை உள்ளடக்கிய இலங்கை உயர் நீதிமன்றம் ஏழாம் திகதி இறுதித் தீா்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கான ஆலோசனைகளில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு மகிந்த ராஜபக்சவுக்கு நல்ல படிப்பினை என்றும் மகிந்த உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.