வடமாகாணம் - வவுனியாவில்

வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசம் - இலங்கைப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென முறைப்பாடு - அச்சத்தில் மக்கள்

கொழும்பு அரசியல் நெருக்கடிகளை மூடி மறைக்கும் செயற்பாடா? கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்
பதிப்பு: 2018 டிச. 05 08:45
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 17:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வவுனியா மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டுக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை அவசர அவசரமாக மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இரவு 8.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் வரை அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளனர். இலங்கைப் பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்த போதும் தாமதித்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்தனர். வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கைக்கு அருகில் உள்ள வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாகவே வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
 
அச்சமடைந்த வர்த்தகர்கள் மக்கள் அனைவரும் தப்பிச் சென்று ஒன்றரை மணி நேரத்தின் பின்னரே இலங்கைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மட்டக்களப்பில் இலங்கைப் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்டமை குறித்து வேண்டுமென்றே முன்னாள் போராளிகள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதைக் கண்டித்தும், மீண்டும் ஒரு போர் வேண்டாம் எனத் தெரிவித்தும் பொது மக்களும் முன்னாள் போராளிகள் உட்பட பலரும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

ஆனாலும் வாள்வெட்டுக்குழு மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் முறையிட்டுள்ளனர்.

பொலிஸாரைக் கண்டதும் வாள்வெட்டுக்குழு தப்பிச் சென்று விட்டது என்றும் ஆனாலும் பொலிஸார் அவர்களைத் துரத்திப் பிடிக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இன்று புதன்கிழமை மீண்டும் சம்ப இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளின் பின்னணியில் இலங்கைப் படையினர் செயற்படுவதாக பொதுமக்கள் ஏற்கனவே குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இலங்கை நாடாளுமன்றத்திலும் வாள்வெட்டுக் குழுக்களின் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

கொழும்பில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அரசியல் நெருக்கடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மீண்டும் வன்முறைகளைத் துாண்டிவிட இலங்கைப் புலனாய்வுப் பிரிவு முயற்சிப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மட்டக்களப்பு - வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் இலங்கைப் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் சிலர் காரணம் எனக் கூறப்பட்டு இலங்கைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவரின் மட்டக்களப்பில் உள்ள வீ்டும் முற்றுமுழுதாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையிடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இது வேண்டுமென்றே முன்னாள் போராளிகள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டு எனக் கண்டித்து பொது மக்களும் முன்னாள் போராளிகள் பலரும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

மீண்டும் ஒரு போர் வேண்டாம் எனவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, அரசாங்கத்தை அமைப்பதற்கு சதி முயற்சிகளில் ஈடுபடுவோரின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே மட்டகளப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்கான காரணமாகும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்ததேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்ட நாள் அன்று இரவே வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இப்போது அரசாங்கமும் இல்லை. முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.