இலங்கை அரசியல் களேபரம்

உயிருக்கு ஆபத்துக்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் - றிசாட் பதியுதீன்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைப்பு?
பதிப்பு: 2018 டிச. 06 22:27
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 06 23:32
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல்வழிப்பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்கிணங்க இன்று காலை அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
 
இலங்கை ஜனாதிபதி மற்றும் கோட்டபாய ராஜபக்‌ஷவை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்த நாமல் குமார, பின்னர் அம்பாறை - மட்டக்களப்பில் வைத்து என்னையும் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தமது கட்சியின் தவிசாளர், செயலாளர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டிருந்ததாக ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்பவனென்ற வகையிலும் அமைச்சரவை அமைச்சர் என்ற வகையிலும், கட்சித் தலைவன் என்ற வகையிலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு இரண்டு பொலிஸாரே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.