இலங்கையில் தொடரும் கடும் மழை

கிளிநொச்சி மாவட்டத்தில் 34 ஹெக்டேயர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது - பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்

இரணைமடு குளத்தை வைத்து அரசியல் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து
பதிப்பு: 2018 டிச. 07 11:50
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 07 11:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நாட்டில் தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் 34 ஹெக்டேயர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பி.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த வாரம் நிலவிய மழைக் காலநிலையால் பல்வேறு பகுதிகளிலும் விவசாயம் உட்பட பயிர்ச்செய்கை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் பெரிய மற்றும் நடுத்தரக் குளங்களின் கீழ் பன்னிரண்டாயிரத்து 255 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 544 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும், மானாவாரியாக 11 ஆயிரத்து 696 ஹெக்டேயரிலும் என மொத்தமாக 26 ஆயிரத்து 495 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கடந்த வாரம் பெய்த மழையினால் 34 ஹெக்டேயர் பயிர்செய்கை முழுமையாகவும் 72 ஹெக்டேயரிலான பயிர்செய்கையில் 70 வீதமான அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக மாகாண விவசாய திணைக்களத்தினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடும் மழையினால் கபிலநிறத்தத்தி மற்றும் எரிபந்தம் ஆகிய நோய்த்தாக்கங்கள் ஏற்பட்டதுடன் அவை இனங்காணப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நோய்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இனஅழிப்பு போரினால் அனைத்தையும் இழந்து அடிப்படையிலிருந்து மெதுமெதுவாக தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிவரும் நிலையில் இயற்கையும் தங்களை வஞ்சிப்பதாக பயிரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் கடல்வளம் உட்பட அனைத்து வளங்களையும் கொண்டுள்ள போதிலும் இங்கு விவசாயமே பிரதான வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது. இதற்கு இங்கு காணப்படும் இரணைமடுக்குளம் பிரதான உந்துசக்தியாக விளங்குகின்றது.

எனினும் தற்போது இதனை அடிப்படையாக கொண்டும் இலங்கை அரசியலில் பல சித்து விளையாட்டுக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தூண்டிவிடப்பட்டுள்ளதுடன் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.