தமிழர் தாயகத்தில்

வடக்கின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளம் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு

மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்காது சிறிதரன் நழுவியதாக தகவல்
பதிப்பு: 2018 டிச. 07 23:25
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 07 23:40
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நீர்வளம் நிலவளம் உட்பட அனைத்து வளங்களையும் கொண்ட தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளம் புனரமைப்பு பணிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும். நீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக இன்று முற்பகல் நீர்மட்டம் வான் கதவு மட்டத்தை அடைந்ததுடன், நீர்த்தேக்க வளாகத்திற்கு சென்ற இலங்கை ஜனாதிபதி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறந்து வைத்தார்.
 
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் செயற்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எனினும் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் உட்பட இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என கிளிநொச்சி செய்தியாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

இருந்தபோதிலும் இலங்கை ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயத்தை முன்னிட்டு இரணைமடுக்குளம் உட்பட அதனை அண்டியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இதற்கான ஆரம்ப நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவ்விடத்திற்கு சென்று நிலைமைகளை அவதானித்திருந்தார்.

எனினும் இன்றையதினம் இரணைமடுவுக்கு சென்ற சிறிதரன் இலங்கை ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன இரணைமடுவிற்கு வருவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே நிகழ்வு இடம்பெற்ற இரணைமடுகுளத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்துகொள்ளாது பொதுமக்கள் கூடியிருந்த இடத்திலேயே நின்றதுடன் இலங்கை ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்தவுடன் அங்கிருந்து சென்றுவிட்டதாக கிளிநொச்சி செய்தியாளர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிதரனிடம் கோரிக்கை விடுத்த போதும் அவர் இதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினால் இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களிடையே பாரிய பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மைக்கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கிவருவதுடன் இலங்கை ஜனாதிபதி அங்கத்துவம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் எதிராக தமது வாக்கை செலுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இவ்வாறான நிலையில் அண்மையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்க முடியாதென இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுப்புத் தெரிவித்திருந்தார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியமைக்கு அமைய அவர் தனது ஆதரவை வழங்கியிருந்தார்.

ஆதரவை வழங்குவதற்கு சிறிதரன் மறுப்புத் தெரிவித்த போது இலங்கை ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள கட்சிக்கு ஆதரவை வழங்குகின்றாரா என்று பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

எதுஎவ்வாறிருப்பினும் இன்றைய நிகழ்வில் சிறிதரன் பங்கேற்காமையானது இலங்கை ஜனாதிபதி தரப்பினருக்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளதா என்று சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.