கிழக்கு மாகாணத்தின்

மட்டக்களப்பில் தொடரும் சட்டவிரோத மணல் கடத்தல் - வீதிகள் சேதமடைந்துள்ளதால் விபத்துக்கள் அதிகரிப்பு

பொலிஸாரின் உதவியுடன் சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 டிச. 08 11:54
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 08 13:07
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவருவதனால் பொதுமக்கள் பயணம் செய்யும் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் தற்போது தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழையினால் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், அதனால் வீதிவிபத்துக்கள் ஏற்படுவதாகவும் ஆலங்குளம் கமக்கார அமைப்பின் தலைவர் சி.மதியழகன் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினார். கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கும், குகனேசபுரம், மேவான்டவன் கிராமம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பிரதான பாதையில் சுமார் ஐந்து அடிக்கு மேல் நீர்தேங்கிக் காணப்படுவதனால் பொதுமக்கள் தமது கிராமங்களுக்குச் செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு பொதுமக்கள் உட்பட பொது அமைப்புக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், வாழைச்சேனை பொலிசாரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், இதனால் குறித்த பகுதியில் உள்ள தமிழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் முற்றாக பாதிப்படைவதுடன் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைச் செய்கை முற்றும் பாதிப்படைந்துள்ளதாக மதியழகன் விசனம் வெளியிட்டார்.

ஆலங்குளம் கிராமத்திலுள்ள ஒரு சில அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு கையூட்டல்கள் வழங்கப்பட்டு சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் தாம் விரும்பிய நேரங்களில் எல்லா இடங்களிலும் இருந்தும் மணல் அகழ்வை மேற்கொள்வதாகவும், இதனால் தாழ்நிலம் மேலும் பள்ளமாவதுடன் கிரவல் வீதிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தடுத்து நிறுத்துமாறு பல தடவைகள் வாகரை பிரதேச செயலாளரிடம் முறையிட்ட போதும், அதனை நிறுத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக அகழப்படும் மணல் இலங்கையின் தென்பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அதிகளவு பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் மட்டக்களப்பு மக்கள் தமது தேவைகளுக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் அதிக விலைக்கு மணலைக் கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.