இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியினால்

தமிழ் மக்களது பிரச்சனைகள் மூடிமறைக்கப்படுகின்றன - மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் வாய்திறக்கவில்லை

சர்வதேச மனித உரிமைகள் தினத்திலன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் - அருட்தந்தை ம.சத்திவேல்
பதிப்பு: 2018 டிச. 08 13:33
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 08 13:39
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் அனைவரும் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்றார்களே தவிர மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் வாய் திறக்கவில்லை என அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருட்தந்தை ம.சக்திவேல் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தின் ஊடாக இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதில்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் குழப்ப நிலையினால் தமிழ் மக்களது அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி உரிமை தொடர்பான பிரச்சனை மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்றவை மூடிமறைக்கப்படுவதாக அவர் விசனம் வெளியிட்டார்.
 
தமிழ் மக்களது மேற்குறித்த பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வைக் காண்பதன் மூலமே மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அருட்தந்தை சத்திவேல் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

அண்மைக்காலமாக தொடரும் அரசியல் குழப்ப நிலையினால் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பேசுபொருளாக அரசியல் கைதிகள் விவகாரம் மாறியுள்ள நிலையில், இவ்விடயம் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வை வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 அளவில், கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ம.சத்திவேல் மேலும் குறிப்பிட்டார்.