தமிழர் தாயகத்தின்

வடக்கு மாகாணத்தில் 660 பேருக்கு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் தகவல்

தனியார் அமைப்பின் தகவலுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையில் பாரிய வேறுபாடு
பதிப்பு: 2018 டிச. 08 14:30
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 08 21:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு சம்பவங்களாலும் 660 பேருக்கு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் இனஅழிப்பு நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பராமரித்துவரும் உயிரிழை என்ற தனியார் அமைப்பின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை பாரிய அளவில் வேறுபடுகின்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் பயன்படுத்தி கூர்மைச் செய்தித் தளம் எழுப்பிய கேள்விக்கு சமூகசேவைகள் திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தகவலில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 420 ஆண்களும் 240 பெண்களும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு சிகிச்சை உட்பட மாதாந்த உதவித்தொகையும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 156 ஆண்களும் 120 பெண்களுமாக மொத்தம் 276 பேரும், கிளிநொச்சியில் 100 ஆண்களும் 42 பெண்களுமாக மொத்தம் 142 பேரும், மன்னாரில் 67 ஆண்களும் 45 பெண்களுமாக மொத்தம் 112 பேரும், முல்லைத்தீவில் 53 ஆண்களும் 22 பெண்களுமாக மொத்தம் 75 பேரும், வவுனியா மாவட்டத்தில் 44 ஆண்களும் 21 பெண்களுமாக மொத்தம் 55 பேரும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளதாக சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரினால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை உயிரிழை என்ற தொண்டு அமைப்பு பராமரித்து வருவதுடன் அவர்களது தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கும் சமூக சேவைகள் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட புள்ளிவபர தகவலுக்குமிடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

உயிரிழை அமைப்பின் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 ஆண்களும் 13 பெண்களுமாக மொத்தம் 50 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 34 ஆண்களும் 10 பெண்களுமாக மொத்தம் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 23 ஆண்களும் 02 பெண்களுமாக மொத்தம் 25 பேரும், மன்னார் மாவட்டத்தில் 08 ஆண்களும் 03 பெண்களுமாக மொத்தம் 11 பேரும், யாழ்ப்பாணத்தில் 24 ஆண்களும் 11 பெண்களுமாக மொத்தம் 35 பேருமாக வடக்கு மாகாணத்தில் 165 பேருக்கு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 39 பெண்களும் 126 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உயிரிழை அமைப்பின் புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த இரு தரவுகளையும் நோக்கும்போது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

இது குறித்து உயிரிழை அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் விவேகானந்தா பிறேம்குமாரிடம் வினவியபோது,

உயிரிழை அமைப்பினால் வழங்கப்பட்ட தரவுகள் குறித்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்டு இந்த அமைப்பின் ஊடாக உதவித்திட்டங்களைப் பெற்றுக்கொள்பவர்களினது எண்ணிக்கை எனக் குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களை(யுத்தம் மற்றும் இதர காரணங்கள்) தாம் பெரும்பாலும் உள்வாங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த எண்ணிக்கை அரச மற்றும் தனியார் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகின்றபோது பாரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளமை குறித்து வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள தகவல் அலுவலர் நா.இராஜமனோகரிடம் வினவியபோது,

சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்குறித்த தகவல்கள் யாவும் சரியானது என உறுதிப்படுத்தினார்.

எனினும் இந்த எண்ணிக்கை பாரிய அளவில் வேறுபடுபடுகின்றதே என வினவியபோது, வைத்தியர்கள் வழங்கிய சிட்டைகளின் அடிப்படையில் சக்கரநாற்காலிகள் பயன்படுத்துவோரை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் கணக்கில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பராமரித்துவரும் உயிரிழை அமைப்புடன் இணைந்து அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி எஸ்.சிறீனிவாசனிடம் வினவியபோது, மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள புள்ளிவிபர தகவலை தன்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.