இலங்கை உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் பொருட்படுத்தாமல்

மூன்று இலட்சம் மக்களை அழைத்து கொழும்பில் மூன்று நாள் தொடர் பேரணி நடத்த ரணில் தரப்பு திட்டம்

மைத்திரி - மகிந்த புதிய அரசியல் அணி - தேர்தலிலும் இணைந்து போட்டியிட முடிவு
பதிப்பு: 2018 டிச. 09 00:08
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 09 12:30
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மைத்திரி - மகிந்தவின் செயற்பாடுகளை கண்டித்தும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மக்கள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களை கொழும்பு நகருக்குள் வரவழைத்து பேரணியை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. கொள்ளுப்பிட்டி காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிட்டு பேரணி நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உயர் நீதிமன்றம் எந்தவகையான தீர்ப்பை வழங்கினாலும் பேரணி தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
 
மைத்திரி - மகிந்தவின் சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்துவதே பேரணியின் நோக்கம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியமைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லையென கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மைத்திரி - மகிந்த கூட்டுக்கு எதிரான மக்கள் பேரணி அடுத்து வரும் வாரங்களில் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியிலும் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக மகிந்தவுடன் கூட்டணி அமைக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு நடைபெற்றது. அங்கு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுடன் இணைந்து அமையவுள்ள புதிய கூட்டணி அனைத்துத் தேர்தல்களிலும் ஒன்றினைந்து செயற்படும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 54 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், அந்தக் கட்சியின் தவிசாளராகச் செயற்படுகின்றார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கவுள்ளது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தான் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றம் சுமத்தியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதில் சந்திரிக்கா முக்கிய பங்களிப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.