தமிழ் மக்களது பூர்வீக நிலங்களைத் தொடர்ந்தும் சூறையாடுகின்றது இலங்கை ஒற்றையாட்சி் அரசு

சுன்னாகத்தில் பொலிஸாருக்கு வழங்க மறுத்த காணியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் மீது தாக்குதல் - பொருட்களும் தீக்கிரை

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து தாக்குதல்- பொலிஸார் பின்னணி என மக்கள் சந்தேகம்
பதிப்பு: 2018 டிச. 11 11:53
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 11 14:09
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் மக்களது பூர்வீக நிலங்கள் இலங்கை இராணுவம் உட்பட அரச தரப்பினரால் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கு பொதுமகன் ஒருவரது காணியை சுவீகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து, நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த காணியில் இயங்கிவரும் உடற்பயிற்சி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
 
தற்போது பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள தனியார் காணியிலிருந்து பொலிஸாரை வெளியேறுமாறு கோரப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றுக் காணியை வழங்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதன்படி சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள அரச காணியை சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த அரச காணி தமக்கு பொருத்தம் இல்லை என்று தெரிவித்துவரும் சுன்னாகம் பொலிஸார், சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கே.கே.எஸ் வீதிக்கு மிக அருகில் உள்ள புலம்பெயர் நாடு ஒன்றில் தஞ்சமடைந்துள்ள தமிழர் ஒருவரின் 14 பரப்புக் காணியை தமக்குப் பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்தே அக் காணியை சுவீகரித்து பொலிஸாருக்கு ஒப்படைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பிரதேசவாசி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்கு எதிர்ப்பு வெளியிட்டும் நேற்று திங்கட்கிழமை காலை உடுவில் பிரதேச செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது சித்திரவதை, கொலை போன்ற மனிதத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபடுவதாகவும், பொது மக்களின் குடிமனைகளுக்கு நடுவில் நிலைகொள்ள வேண்டாம் என்ற பிரதான கோசமும் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமது எதிர்ப்புக் கோரிக்கை அடங்கிய மகஜரை உடுவில் பிரதேச செயலரிடம் மக்கள் கையளித்திருந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்தே நேற்றுத் திங்கட்கிழமை இரவு குறித்த தனிநபரின் காணியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த பத்துப் பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலொன்று உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.

பெற்றோல் குண்டுகளை வீசி அங்கிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான உடற்பயிற்சி உபகரணங்களை தீயிட்டு எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இலங்கைப் பொலிஸார் இருப்பதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும், தகவல் வழங்கப்பட்டு நீண்ட ரேத்தின் பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததாக சுன்னாகத்தைச் சேர்ந்த நபரொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தொிவித்தார்.

தமிழ் மக்களது பல ஏக்கர் கணக்கிலான பூர்வீக நிலங்கள் இலங்கை அரச படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வசிப்பதற்கு சொந்த இடமின்றி நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றனர்.

ஒருபுறம் மக்களது காணிகளை கையளிப்பதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்துடைப்புக்காக சில நாடகங்களை நிகழ்த்தினாலும், மறுபுறம் மறைமுகமாக தமிழ் மக்களது நிலங்களை சூறையாடும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.