போர் அழிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதும்

விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முன்னாள் போராளிகள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது நிர்க்கதி

இலங்கை அரசாங்கத்தின் நலத்திட்டங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம்
பதிப்பு: 2018 டிச. 12 11:22
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 12 12:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, ஒரு நாளேனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு உதவியிருந்தாலோ கைதுசெய்யப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு அமைய கைதுசெய்யப்பட்டு சித்திரவதை முகாம்களான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
 
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சுமார் 440 முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உள்ளதாகவும், இதில் அதிகளவானோர் பெண்கள் எனவும் இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் போரின்போது காயமடைந்தவர்கள் என்பதுடன் அவயவங்களை இழந்துள்ளதாகவும் மன்னார் செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் சிலர் போரின்போது கண் பார்வையை முற்றாக இழந்துள்ளதுடன், ஒரு சிலர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் நிரந்தர அங்கவீனர்களாக மாறியுள்ளதுடன், அனேகமானோர் தற்போது திருமணம் முடித்து குடும்பமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் அனைவரும் எவ்வித நிரந்தர வருமானமும் அற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள மன்னாரைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், தாம் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், இலங்கை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் எதுவும் அரச அதிகாரிகளினால் தமக்கு உரிய முறையில் பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் இலங்கை சமூக சேவைகள் திணைக்களம் நலிவுற்றவர்களுக்கும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் மாதாந்தம் வழங்கும் உதவித் தொகைகளும் முன்னாள் போராளிகள் பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் கூர்மை செய்தி தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

முன்னாள் வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளுக்கான வாழ்வாதார உதவி செயற்றிட்டம் மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு அவர்களில் சிலருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. எனினும் குறித்த திட்டத்திலும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் பலர் அரசியல் நோக்கங்களுக்காக புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

முன்னாள் போராளிகளில் பலர் உயர்தர கல்வித் தகைமைகளைக் கொண்டுள்ளதனால், அரச வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்தும் தமக்கு அரசியல் செல்வாக்கு இல்லாத காரணத்தினாலும் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய சில ஆளும் தரப்பு அரசியல்வாதிகளினாலும் வேலைவாய்ப்புக்களிலிருந்து தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

முன்னாள் போராளிகளும் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரும் போதிய தொழில்வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தற்பொழுது மேற்கொள்ளப்படும் கட்டிட நிர்மாண பணிகளில் தொழில் புரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் முன்னாள் போராளிகளாக உள்ளதனால் நிர்மாண பணிகளில் உள்வாங்குவதற்கும் கட்டட நிர்மாணதாரர்கள் மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

இதனால் மன்னாரைச் சேர்ந்த முன்னாள் ஆண் போராளிகள் தென்னிலங்கை பகுதிகளிற்குச் சென்று கட்டிட நிர்மாணப் பணிகளில் கூலிகளாக மிகக் குறைந்த வேதனத்தில் தொழில் புரிய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆதங்கம் வெளியிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் வாழும் தங்களது நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், தமது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் போராளிகள், தமது எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.