முடிவின்றித் தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

அமெரிக்க இராஜதந்திரி கொழும்புக்கு வருகை? மைத்திரி, மகிந்த, ரணில், சம்பந்தன் ஆகியோரைச் சந்திக்கவும் ஏற்பாடு

மைத்திரியைச் சந்திப்பதில் பயனில்லை என்கிறார் கரு ஜயசூரிய
பதிப்பு: 2018 டிச. 13 10:43
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 13 11:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றிய பின்னரும் ஜனாதிபதி மைத்திரி தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென கூறிவிட்டார். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று இரவே கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரின் பெயரை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்தி ஐக்கிய தேசிய முன்னணிக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரியின் பிடிவாதத்திற்கு இணங்க முடியாது என்றும் தனிப்பட்ட விரும்பங்களுக்காக இலங்கையின் அரசியல் யாப்பு விதிமுறைகளை மீற முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஒக்ரோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் பின்னணியில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருப்பதாக ஏற்கனவே கூர்மை செய்தித் தளத்தில் செய்திகளும் செய்தி விமர்சனங்களும் வெளிவந்திருந்தன.

இலங்கையில் ஜனநாயகம், அரசியல் யாப்பு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் இரண்டு தடவை அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒக்ரோபர் மாதம் இலங்கை மற்றும் தெற்கு, மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்கான பதில் பிரதி உதவிச் செயலாளராக நியமனம் பெற்ற மூத்த இராஜதந்திரி டேவிட் ரன்ஸ் கொழும்பக்கு வருகை தந்துள்ளார்.

இவருடைய கொழும்பு வருகையின் நோக்கம் எதுவும் கொழும்பில் அமெரிக்கத் தூதரகத்தினாலோ, இலங்கை வெளியுறவு அமைச்சினாலோ அதிகாரபூர்வமாக இதுவரை கூறப்படவில்லை.

ஆனால் இலங்கையின் அரசியல் நெருக்கடி குறித்துப் பேசுவதற்காகவே அமெரிக்காவின் இந்த மூத்த இராஜதந்திரி வருகை தந்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மைத்திரி, மகிந்த, ரணில், சம்பந்தன் ஆகியோரை இந்த மூத்த இராஜதந்திரி சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரியை இனிமேல் சந்தித்துப் பேசுவதில் பயனில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.