மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு

மனித எச்சங்களைப் பார்க்கும்போது தமிழின அழிப்பு புலனாகின்றது - அனந்தி சசிதரன்

சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்
பதிப்பு: 2018 டிச. 13 13:03
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 13 17:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ள உறவுகளினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரம் இரும்புக் கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் மீட்கப்பட்டமையானது மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு மக்கள் அடிமைகளாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வடக்கு மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
 
மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் சதொச மனித எலும்புக்கூடுகளை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு தூரக பிரதிநிதிகள் மன்னார் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் மனித புதைகுழியில் மனித எலும்புக்கூடுகள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருவதுடன் 21 குழந்தைகளது எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் என்ற காரணத்திற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது இதற்கு காரணமானவர்கள் யார் யாரால் இந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பன போன்ற உண்மை வெளிவர வேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவம் உட்பட முப்படையினரும் வெளியேறிய அத்தனை இடங்களிலும் மனிதப் புதைகுழி இருக்கலாம் என சந்தேகம் எழுத்துள்ளது. எனவே இவை சர்வதேச மத்தியஸ்தத்தின் கண்கானிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனூடாக எதிர்காலத்திலாவது ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என விரும்புகின்றோம்.

எனவே இப்போது தெற்கில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்ப நிலையில் அங்கிருக்கும் பேரினவாத கட்சிகள் எதுவும் நாட்டை ஆண்டு விட்டு போகட்டும்.

ஆனால் எங்களுக்கு இன்று வரை மனித புதைகுழி தொடர்பாக ஆழமான கருத்து அல்லது அழுத்தம் வழங்கப்படாத நிலையில் இந்த புதைகுழி தொடர்பான உண்மைகள் வெளிவருவதன் ஊடாக பல உண்மைகள் வெளிவரும் வாய்ப்புக்கள் உருவாகும் என்று நம்புகின்றோம் என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.