இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு ஏற்பட்ட சோதனை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு முரணானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு- சர்வஜன வாக்கெடுப்பு நடத்த மைத்திரி தீர்மானம்?

நீதியரசர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லையென மகிந்த தரப்பு விளக்கம்
பதிப்பு: 2018 டிச. 13 17:22
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 13 23:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தவறானது என்றும், அவ்வாறு கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்ட இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து இந்தத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை மாலை ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நவம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் பொது அமைப்புகளும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்டு மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்ட இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இதனால் நாடாளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூடியது. ரணில் விக்கிரமசிங்கவை மீ்ண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தன.

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைகளும் நாடாளுமன்றத்தில் நான்கு தடவைகள் நிறைவேற்றப்பட்டுமிருந்தன.

ஆனாலும் அதனை ஏற்க முடியாதென மைத்திரிபால சிறிசேனவும் தொடர்ச்சியாக மறுத்து வந்தார்.

இந்த நிலையில் ஏழு நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம் இன்று மாலை அந்த இடைக்காலத் தடை உத்தரவை உறுதிப்படுத்தி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்தச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட நீதியர்குழு மனுக்களை விசாரித்தனர்.

குறித்த மனுக்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 13 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தபோது மூன்று நீதியரசர்களே விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

ஆனால் இந்த மனுக்கள் அரசியல் யாப்பு நெருக்கடி தொடர்பானது என்பதால் முழு நீதிமன்றமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மகிந்த தரப்புக்கு சார்பான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனால் ஏழுபேர் கொண்ட நீதியர்களை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசா் நியமித்திருந்தார்.

அதேவேளை, அரசியல் யாப்பின் பிரகாரம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்ற அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை என மகிந்த தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரியிடம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தலாமா இல்லையா என்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.