கேலிக்குள்ளாகும் பாஜக அரசாங்கத்தின் செயல்!

இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தலைமை பொறுப்பு வரலாறு படித்தவருக்கு!

தொடர்ந்து ஊசலாடும் பாஜகவின் பொருளாதாரக் கொள்கையில் அடிமேல் அடி!
பதிப்பு: 2018 டிச. 13 21:43
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: டிச. 14 12:14
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய ஒன்றியத்தின் முழு பொருளாதாரத்தையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்படும் நடுவண் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் உர்ஜித் பாடேல் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம், வரலாற்று பட்டம் பெற்று இந்திய ஆட்சியியல் பணியில் இருந்த சக்திகந்ததாஸ் என்பவரை அப்பொறுப்புக்கு நியமித்துள்ளது. உர்ஜித் பாடேல் பதவி விலகிய சர்ச்சையே இன்னும் ஓயாத வேளையில், பொருளாதாரத் துறையில் எவ்வித பின்புலமும் இல்லாத ஒருவர் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தவல்ல நடுவண் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மேலும் சர்சையினை உருவாக்கியுள்ளது.
 
கென்யா நாட்டில் பிறந்த குஜராத்திய இனத்தவரான உர்ஜித் பாடேல், ஆக்ஸ்ஃபோர்டு, யேல் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் உயர்க்கல்விப் பட்டம் பெற்றவர். அதோடு, போஸ்டன், ரிலையன்ஸ் உட்பட தனியார் நிறுவனங்களில் பொருளாதார அலோசகர் உட்பட பல்வேறு உயர் பொறுப்புகளிலும் பதவி வகித்தவர்.

2013இல் இந்திய நடுவண் வங்கியின் துணை ஆளுநராகவும், 2016இல் ஆளுநராகவும் பதவியினைத் தொடர்ந்தார்.

பொதுவாகவே, பாஜக கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரும்பொழுது குஜராத்திய இனத்தவர்களே இந்தியத் துணைக்கண்டத்தின் மிக உயர் பொறுப்புக்கு வருவார்கள் என்ற குற்றச்சாட்டு வருவதுண்டு!

உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்கள், பொருளாதார வலைப்பின்னல்களில் மட்டுமல்ல இந்தியவெங்கும் கோலோச்சும் நிறுவனங்களில் கூட குஜராத்திய தாக்கம் இருக்கும்.

2013இல் ரகுராம் ராஜன் என்ற தமிழர் ஒருவரே, இந்திய நடுவண் வங்கியின் ஆளுநராக காங்கிரஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். 2016இல் பாஜக அரசாங்கம் நிலவி வரும் குற்றச்சாட்டுக்கு ஏற்ற வகையில் குஜராத்தியரான உர்ஜித் படேலை நியமித்தது குறிப்பிட்டத்தக்கது!

இத்தகை நிலையிலும் கூட, ஆளும் பாஜக அரசின் பொருளாதார முடிவுகளில் அரசியல் கலந்துள்ளதாகவும் இந்திய துணைக்கண்டத்தின் பொருளாதார் நடவடிக்கைகள் பலவற்றில் தவறான முடிவை பாஜக அரசாங்கம் எடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நடிகரும் அரசியல் விமர்சகருமான சோ மறைவிற்கு பின், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியராக இருந்து வருபவரும், தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவருமான, பட்டயக் கணக்கர் (Chartered Accountant) குருமூர்த்தியின் தலையீடு அதிகரித்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோன்று, நடுவண் வங்கியில் இருக்கும் உபரிநிதியை, நடுவண் அரசுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும், நடுவண் அரசிற்கு தேவையான கடனை வழங்குவது தொடர்பாகவும் நடுவண் அரசிற்கும் நடுவண் வங்கிக்கும் இடையில் பிரச்சனை நிலவி வந்தது. மேலும் வங்கிகளில் வாராக்கடன் அதிகமானதற்கு காரணம் இந்திய நடுவண் வங்கி தான் என்று இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றச்சாட்டினை வைத்தார்.

இத்தகையச் சூழலில்தான் உர்ஜித் படேல் திடீரென்று தன் சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்தார்.

ஏற்கனவே இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக செயல்பட்டு வந்த அரவிந்த் சுப்ரமணியன், இப்படியான ஒரு காரணம் சொல்லி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, இந்திய ஒன்றியத்தின் அதியுயர் பொறுப்புகளில் ஒன்றான நடுவண் வங்கி ஆளுநர் பதவிக்கு யாரை நியமியக்கப்போகிறார்கள் என உலக நாடுகள் பலவும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த நிலையில், வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்று, இந்திய குடிமையியல் பணியில் இருந்த அதிகாரியினை ஆளுநராக நியமித்து ஆளும் பாஜக அரசாங்கம் புதிய வரலாற்றை எழுதியுள்ளது எனலாம்.

குஜராத் மாநிலத்தில் நரந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 2007-2012 வரை அமைச்சராக வீற்றிருந்த ஜெய் நாராயண் வியாஸ், ”தன் வரலாற்று அறிவைக் கொண்டு, நடுவண் வங்கியினை வரலாற்றில் இடம்பெற வைக்கமாட்டார் என தான் நம்புவதாக” தன் கீச்சுப்பக்கத்தில் (Twitter) தெரிவித்துள்ளார்.

மூத்த பாஜக தலைவர்கள் பலரைப் போலவே, ஜெய் நாராயண் வியாஸ் அவர்களும் 2012ற்கு பின் பாஜகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.