உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் இலங்கை அரசியல் நெருக்கடி தொடருகின்றது

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகள் - கருத்து வெளியிட வேண்டாமென அறிவுறுத்தல்

மகிந்த தரப்பின் மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
பதிப்பு: 2018 டிச. 14 17:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 14 20:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மகிந்த ராஜபக்ச தரப்புக்குள் முரண்பாடுகள் மோதல்கள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தவிசாளராக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 54 உறுப்பினர்களும் தனித்துச் செயற்படுகின்றனர். இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கட்சி சார்பாக வெளியிடப்பட்டு வருகின்றன.
 
இதனால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெளியான உயர் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசனைகள் இன்றி ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சார்பில் எவரும் கருத்து வெளியிட முடியாதென கட்சியின் ஊடகப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி மகிந்த தரப்புடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கருத்துக்களை வெளியிட முடியாது எனவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகள் இன்றி உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்துக் கூற வேண்டாம் என மகிந்த சமரசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலப் பயணம் தொடர்பாக கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது கட்சித் தலைமையோ தான் தீர்மானிக்க வேண்டுமென்றும் வேறு எந்த உறுப்பினர்களும் கருத்துக் கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் மகிந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மைத்திரி தiலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து செயற்படுவது தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச உரையாடியுள்ளார். இதேவேளை, மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா, மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் உரையாடியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்திற்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பு உயர்நீதிமன்றத்தில் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், அந்த மேன்முறையீட்டை நிராகரித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.