இலங்கையில் நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் சாத்தியம்

மைத்திரியால் வழங்கப்பட்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார் மகிந்த - ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்

சிறிசேன இனியாவது சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் என கோரிக்கை
பதிப்பு: 2018 டிச. 14 21:40
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 14 22:10
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தன்னிச்சையாக பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதுடன் மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டரசாங்கத்தில் பிரதமராக அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக கொழும்பு அரசியல் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு மஹிந்த ராஜபக்ச நாளை சனிக்கிழமை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இல்ங்கை மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது இராஜினாமா தொடர்பில் மகிந்த அறிவிப்பார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, அவருக்கு மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தமது ருவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்தவின் இராஜினாமாவை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ராஜித சோனரட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பித்த அரசியல் நெருக்கடி நிலையில் 49 நாட்களின் பின்னர் நீதிமன்றத் தீர்ப்புக்களை அடுத்து நேற்று வியாழக்கிழமை மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்ச உட்பட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இனியாவது சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாமாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.