இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னரான தமிழர் நிலை

இலங்கை நீதித்துறை சுயாதீனமானது என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மூலமாக சர்வதேசத்துக்கு ரணில் அறிவித்துள்ளார்

பௌத்த தேசிய கருத்தின் அடிப்படையில் நீதித்துறையின் சுயாதீனம் சறுக்கும் என்கிறார் குருபரன்
பதிப்பு: 2018 டிச. 15 10:45
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 15 11:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தால் இலங்கையில் ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தமைக்கு இலங்கை நீத்தித்துறையின் சுயாதீனமான செயற்பாடுதான் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் கூறியுள்ளார். அத்துடன் மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், ஆகியவற்றின் செயற்பாடுகளும் பிரதான காரணம் எனவும் அவர் தனது ருவிட்டர் பதிவில் கூறியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இலங்கை அரச வர்த்தமானி அறிவிப்பு அரசியல் யாப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
அதேவேளை, கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து பேசுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுடன் மைத்திாிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவின் கொழும்பு இல்லத்தில் வைத்து பல மணிநேரம் உரையாடியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூடிய அறைக்குள் மைத்திரி மனம் விட்டுப் பேசியதாகவும் ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணைகள் எதனையும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காது என ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை மிக விரைவில் மைத்திரி சந்திப்பார் என்றும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்பட்ட நல்லாட்சி தொடரும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இலங்கை நீதித்துறையை சுயாதீனமான நிறுவனம் என சர்வதேச அரங்கில் நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்தியுள்ளார் என அவதானிகள் கூறுகின்றனர்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் போர்க்குற்ற விசாரணை கூட இலங்கை நீதித்துறையின் ஊடாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மூலமாக ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ளார் எனவும் அது ரணிலின் தந்திரோபாயம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் குருபரன் குமாரவேல் தனது முகநுால் பதிவில் இவ்வாறு கூறுகின்றார்.

நேற்றைய தீர்ப்பை வைத்துக் கொண்டு இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தை எடைபோட முடியாது என்பது எனது கருத்து. நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசியலமைப்பு ஏற்பாடுகள் தெளிவானவை. பொருள்கோடல் செய்யப்பட தேவையில்லாதவை. இதிலே உயர் நீதிமன்றம் வேறொரு தீர்ப்பிற்கு வந்திருக்க வாய்ப்பில்லை.

இலங்கையின் நீதித்துறை பொதுவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி தொடர்பிலான பொதுவான அல்லது வழமையான விடயங்களில் (ordinary questions of rule of law) சுதந்திரமாகவே இயங்கி வந்திருக்கின்றது. சட்டத்துறை, நிறைவேற்றுத் துறையிடமிருந்து பொதுவில் சுதந்திரமாக உரிய இடைவெளியை விட்டே இயங்கியிருக்கிறது.

ஆனால் (கொழும்பு) நீதிமன்றங்களின் சுதந்திரம் எங்கு சறுக்கு கின்றதென்றால் அது சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை அல்லது தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்த தவறுவதிலேயே. நியாயமான விதி விலக்குகள் உண்டு. ஆனால் பொதுவில் இதுவே உண்மை.

இன்று பொதுவில் நிலவும் கொண்டாட்ட மனநிலையில் இதை சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம். கடுமையான உண்மைகளை உரிய நேரங்களில் பேசுவதே எங்கள் தொழிலின் அறம்.

இவ்வாறு குருபரன் கூறியுள்ளார்.