வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முறைப்பாடு

எதிர்வரும் மாசி மாதத்துடன் 2 வருடங்கள் நிறைவு
பதிப்பு: 2018 டிச. 15 14:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 10:00
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளின் நிலை குறித்து அறியத்தருமாறு வலியுறுத்தி, கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமை ஆணையகத்தில் தாம் செய்த முறைப்பாட்டுக்கு இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும், குறித்த முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என்பதனை தமக்கு அறியத்தருமாறும் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 
வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி முன்வைத்த கோரிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி எம்.றோகித பிரியதர்சன பெற்றுக்கொண்டதாக, முறைப்பாட்டை பதிவு செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

தமது பிள்ளைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், மனித உரிமைகள் ஆணையகம் இதுவரை பதில் வழங்காது காலங்கடத்திவரும் நிலையிலேயே, தாங்கள் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டதுடன், தமது இந்த கோரிக்கைக்கு 14 நாட்களுக்குள் உறுதியான பதில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இலங்கையில் இனஅழிப்பு போரின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக் கண்டறியும் நடவடிக்கையும் வருடக்கணக்காக தொடர்கின்றது.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்குமாறு வலியுறுத்தி, அவர்களது உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டம் எதிர்வரும் மாசி மாதத்துடன் 2 வருடத்தை நிறைவுசெய்யவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.