இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின்

பிரதம பிராந்திய முகாமையாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி தொழிற்சங்கப் போராட்டம்

ஏழு சாலை ஊழியர்களும் ஒன்றிணைந்து கடிதம் மூலம் அறிவிப்பு
பதிப்பு: 2018 டிச. 31 21:59
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 31 23:16
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி, வடபிராந்தியத்தில் கடமையாற்றும் ஏழு சாலை ஊழியர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பாக சாலை ஊழியர்களால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்,

நிர்வாகத் திறமையற்ற வடபிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளரான கே.கேதீசன் என்பவரால் வடபிராந்திய சாலைகள் தற்போது இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கிவருகின்றன.

ஏற்கனவே நாங்கள் எழுத்து மூலமாக முன்வைத்த பத்துக் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால், வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் வேதனையுடனும் தங்களது சேவையை ஆற்றி வருகின்றனர்.

இதுவரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்கள் வட பிராந்திய பிரதம பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டோம். இன்று வரையில் அவற்றுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

ஆனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்களின் நன்மை கருதி கே.கேதீசனை வடக்கிலிருந்து வெளியேற்றித்தருமாறும், புதிய பிரதான பிராந்திய முகாமையாளராக வட பிராந்திய தொழிலாளர்களுடன் இணைந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பக்கூடிய திறன் வாய்ந்த எஸ்.குலபாலச்செல்வம் என்பவரை நியமிக்குமாறு ஏழு சாலை ஊழியர்களும் இணைந்து கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்வரும் 3 ஆம் திகதிக்குள் எமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால், 4 ஆம் திகதி முதல் வடபிராந்திய ஏழு சாலை தொழிற்சங்கங்கள் இணைந்து வடபிராந்திய ஏழு சாலைகளின் செயற்பாடுகளையும் முடக்கி மாபெரும் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.