வடமாகாணத்தின் - முல்லைத்தீவில்

தமது நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பு மக்கள் போராட்டம்

பதற்றநிலை ஏற்பட்டதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தகவல்
பதிப்பு: 2018 டிச. 31 23:07
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 31 23:28
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Keppapulavu
#Land
#Protest
#Srilanka
இலங்கை இராணுவத்தினால் சர்வதேச நாடுகளின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப் போரைத் தொடர்ந்து இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கேப்பாபுலவு மக்களது போராட்டம் 2 வருடங்களை அண்மிக்கவுள்ள நிலையில், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடமும் பொய்த்துப் போயுள்ளதாகவும், தமது பூர்வீக நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறும் வலியுறுத்தி 2018 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று கேப்பாபுலவு பிரதான பாதுகாப்பு படைத்தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
 
தமக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பாடசாலை என்பன இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து போராட்டம் நடத்திய போதும் எவ்வித பயனுமில்லை என காணி உரிமையாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

இராணுவ தலைமையகம் முன்பு மக்கள் முன்னெடுத்த திடீர்ப் போராட்டம் காரணமாக கேப்பாபுலவு பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொலிஸார், மக்கள் அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக கேப்பாபுலவு இராணுவ முகாமைச் சூழ நிறுத்தப்பட்டதாக முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோர், கட்டம் கட்டமாக மக்களது காணிகளை விடுவிப்பதற்கான பணிகள் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நடைபெற்றுவருவதாகவும், விரைவில் கேப்பாபுலவு மக்களுடைய காணிகள் தொடர்பிலும் ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கும் எனவும், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதிவரை அவகாசம் வழங்கி இந்த இராணுவ முகாம் வாயிலை மறித்து மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.

அரச அதிகாரிகளது கோரிக்கைக்கு இணங்கிய காணி உரிமையாளர்கள், தமது போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றதோடு 25 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காவிட்டால் மீண்டும் இராணுவம் கைப்பற்றியுள்ள தமது சொந்த நிலத்தினுள் தாமாகவே செல்லவேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துக் கலைந்து சென்றனர்.

இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் அது தொடர்பான செய்திகளைச் சேகரித்த ஊடகவியலாளர்களையும் மக்களது காணிகளில் அத்துமீறி முகாம் அமைத்துத் தங்கியுள்ள இலங்கை இராணுவத்தினர் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தியதாக முல்லைத்தீவு செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.