கிளிநொச்சியில் கடும் வெள்ளம்

உதவி வழங்கச் சென்றோருக்கு இடையூறு விளைவித்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை

இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாக தகவல்
பதிப்பு: 2019 ஜன. 01 07:00
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 01 10:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Flood
#Srilanka
#Court
கிளிநொச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கண்டாவளைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டு, கண்டாவளை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையத்தில் கடந்த 23 ஆம் திகதி உதவிப்பொருட்களை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களையும் தடுத்து நிறுத்தியதாக கிளிநொச்சி செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி அதிகாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரைக் கைதுசெய்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில் 1747/18 என்ற வழக்கின் பிரகாரம் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரையும் நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது, இருவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டதாக கிளிநொச்சி செய்தியாளர் குறிப்பிட்டார்.