வவுனியாவில்

ஆயுதங்களுடன் வந்த நபர் தப்பியோட்டம் - கனகராயன்குளம் முதல் புதூர் வரை விசேட அதிரப்படை, இராணுவம் தேடுதல்

மீண்டும் போர்க்காலம் போன்று தமது பிரதேசம் காட்சியளிப்பதாக மக்கள் அச்சம்
பதிப்பு: 2019 ஜன. 02 21:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 02 21:29
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#Kanakarayankulam
#Bomb
#Srilanka
#Military
வவுனியா மாவட்டத்தின் புதூர் முதல் கனகராயன்குளம் வரையான பகுதியில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை இராணுவம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கையினால் வருட ஆரம்ப நாளான நேற்று திங்கட்கிழமை முதல் தாம் அச்சமடைந்துள்ளதுடன் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
 
புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்டபோது சந்தேகநபர் தப்பியோடிய நிலையில் அவர் கொண்டுசென்ற பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்து அப்பகுதி முழுவதும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் நடமாடுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.

இதன்போது நேற்று இரவு 10 மணியளவில் அங்கு வந்த ஒருவரை மறித்து சோதனையிட முற்பட்டபோது குறித்த நபர் தான் கொண்டு வந்த பையை வீசிவிட்டு காட்டுக்குள் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பையில் இருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த பையை வீசிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைத் தேடியறியும் நோக்கிலும் காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புதூர் முதல் கனகராயன்குளம் வரையான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியும் நாடப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருவது மீண்டும் ஒரு போர்க்காலம் போன்று காட்சியளிப்பதாகவும் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் புதூர் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கூர்மை இணையத்திற்கு கருத்து தெரிவித்தார்.