வடக்கில்

நீதி கோரி வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - மாணவர்கள், மக்கள் வீதிகளில்

வடபிராந்திய முகாமையாளரை மாற்றி புதியவரை நியமிக்குமாறு வலியுறுத்தல்
பதிப்பு: 2019 ஜன. 04 09:54
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 04 10:03
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#NothernProvince
#SLTB
#Strike
வடக்கு மாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களாகிய தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
நிர்வாகத் திறமையற்ற வடபிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளரான கே.கேதீசன் என்பவரால் வடபிராந்திய சாலைகள் தற்போது இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கிவருகின்றன.

ஏற்கனவே நாங்கள் எழுத்து மூலமாக முன்வைத்த பத்துக் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால், வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் வேதனையுடனும் தங்களது சேவையை ஆற்றி வருகின்றனர்.

இதுவரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்கள் வட பிராந்திய பிரதம பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டோம். இன்று வரையில் அவற்றுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

ஆனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்களின் நன்மை கருதி கே.கேதீசனை வடக்கிலிருந்து வெளியேற்றித்தருமாறும், புதிய பிரதான பிராந்திய முகாமையாளராக வட பிராந்திய தொழிலாளர்களுடன் இணைந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பக்கூடிய திறன் வாய்ந்த எஸ்.குலபாலச்செல்வம் என்பவரை நியமிக்குமாறு ஏழு சாலை ஊழியர்களும் இணைந்து கேட்டுக்கொள்கின்றோம் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.

வடபிராந்தியத்தில் உள்ள ஏழு சாலை தொழிற்சங்கங்கள் இணைந்து தமது செயற்பாடுகளையும் முடக்கி மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக பிராந்திய செய்தியாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.