கிழக்கு மாகாணத்தின்

மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத நோயினால் கால்நடைகள் உயிரிழப்பு - திட்டமிட்டா சதியா என தொழிலாளர்கள் சந்தேகம்

பாற்பண்ணை உரிமையாளர்களது விபரங்கதை் திரட்டுவதற்கு இராணுவம் முயற்சி
பதிப்பு: 2019 ஜன. 09 14:30
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 09 14:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Cattle
#Batticaloa
#Srilanka
#Military
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மைலத்தமடு மற்றும் பெரிய மாதவணைப் பகுதியில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை பகுதியில் உள்ள கால்நடைகள் அடையாளங்காணப்படாத தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மருந்துகளைக் கொடுத்தவுடன் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படத்துவதாக கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் செயலாளர் த.நிமலன் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கால்நடை வைத்தியருக்கு அறிவிக்கப்பட்டு அவர் பண்ணைக்கு வந்து பார்வையிட்டதன் பின்னர் வைத்தியர் வழங்கிய தடுப்பு மருந்தை கால்நடைகளுக்கு கொடுத்த போதும் இறப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என செயலாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

அண்மையில் வாழ்வாதார தொழிலாக கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களின் பெயர் விபரங்களை தரவை பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரிடம் சமர்ப்பிக்குமாறு பண்ணை உரிமையாளர்களிடம் மழைமண்டி இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் தெரிவித்துவருவதாக பாற்பண்ணை உரிமையாளர்கள் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலக அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, தற்போது மாவட்டத்தில் பாஸ் நடைமுறை இல்லை எனவும் இராணுவத்தினருக்கு அவ்வாறான ஏதும் நடவடிக்கை தேவையாக இருந்தால் அவர்கள் தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே பால் பண்ணையாளர்கள் எவரும் தமது பெயர் விபரங்களை இராணுவத்திடம் கொடுக்க வேண்டாம் என அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்தே தற்போது மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளது உடல் வெப்பநிலை திடீரென அதிகரிப்பதாகவும் பின்னர் எவ்வித உணவுகளையும் உட்கொள்ள மறுப்பதாகவும் வழமைக்கு மாறாக வயிற்றோட்டம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சையளிக்கும் போது மாடுகள் உயிரிழப்பதாக அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

இப்பகுதியில் தற்போது 172 பண்ணைகள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 72 மாடுகள் இறந்துள்ளன.

இவற்றுக்கான தடுப்பு மருந்தை உரிய முறையில் வைத்தியர்கள் வழங்காவிட்டால் பால் பண்ணையாளர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நிமலன் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவமானது அங்கிருந்து பாற்பண்ணையாளர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள தொழிலாளர்கள் இந்தப் பிரச்சனைக்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தில் உள்ள மாடுகளைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.