இலங்கையில் ஜனநாயகம் மீறப்பட்டமைக்காக

தேசமான்ய விருதை உத்தியோகபூர்வமாக மைத்திரியிடம் திருப்பிக் கொடுத்தார் தேவநேசன் நேசையா

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு மைத்திரியே காரணம் என குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஜன. 04 14:06
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 04 14:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#DeshmanyaAward
#Srilanka
#PoliticalCrisis
#Democracy
இலங்கையில் ஜனநாயகம் மீறப்பட்டமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை அதனை தனக்கு வழங்கிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை கையளித்துள்ளார். ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ள ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரி கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப் போவதாக அறிவித்திருந்தார்.
 
1959 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை சிவில் சேவையில் பல்வேறு உயர்பதவி நிலைகளில் பணியாற்றி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் கலாநிதி தேவநேசன் நேசையா மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்கக் கடிதமொன்றை எழுதியிருந்தார்.

அவர் சிறிசேனவுக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில்,

" விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

எமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக்கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.

" உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல. ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக எமது 70 வருடகால பழமை வாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இல்லாமல் செய்துவிட்டன.

"நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித்தருவதை விட வேறு வழி எனக்கு ஒரு விசுவாசமான, தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை. நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகளைச் செய்வேன்.

"எனது இந்த முடிவு எளிதாகவோ அல்லது அவசரமாகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல. 60 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சிவில் சேவையில் முதலில் இணைந்து கொண்ட நாளில் இருந்து நான் வரித்துக்கொண்ட கோட்பாடுகளின் பிரகாரமே செயற்பட்டு வந்திருக்கின்றேன். அது எனக்குச் சுமையாக இருந்தாலும் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட சுமை.

எனது நீண்டகால சிவில் சேவையில் எனது விழுமியங்களை விட்டுக்கொடுப்பதற்கு மறுத்த காரணத்தால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களின் கீழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கங்களின் கீழும் நான் அடிக்கடி தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தேன்.

"நீங்கள் தந்த தேசமான்ய விருதில் பெருமைப்பட இனிமேலும் எனக்கு எதுவுமில்லை என்பதால் நான் இதுவரை மதித்து வைத்திருந்த பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்புவதைத் தவிர எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை இலங்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் கையளித்துள்ளதாக கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து விட்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டிணைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.