இலங்கை

இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி செட்டிகுளம் - இராமியன்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

தமது காணிகளில் விவசாயம் செய்து தமக்கே அதனை விற்பனை செய்வதாக மக்கள் விசனம்
பதிப்பு: 2019 ஜன. 04 22:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 04 23:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#Protest
#Land
#Srilanka
தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற இன அழிப்புப் போரைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களது காணிகளை அபகரித்துள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், வவுனியா, செட்டிகுளம் - இராமியன்குளம் பகுதியில் மக்களின் காணிகளை கையகப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் செய்வதாவும் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தி குறித்த காணிகளை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தி பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மதவாச்சி - மன்னார் வீதியில் மதிய நேர தொழுகையின் பின்னர் ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக சுமார் ஒரு மணிக்கு ஒன்றுகூடிய தமிழ் பேசும் மக்கள், தமது பூர்வீக காணிகளை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கியிருந்ததாக வவுனியா செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.

இதன்போது 'எங்கள் மூதாதையரின் காணியில் இராணுவம் விவசாயம் செய்கின்றது, உடனே எமது காணிகளை விடுவிக்க வேண்டும்', ' கடந்த டிசம்பர் 31 இற்கு முன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதியின் சொல் பொய்', அரசே எமது விவசாய நிலங்களை விட்டுவிடு, விவசாய நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் விட்டு வெளியேறு என்பன போன்று வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் தாங்கியவாறு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகஜனிடம் மக்கள் மகஜரொன்றினைக் கையளித்ததுடன், இராணுவத்தினர் தமது காணியில் விவசாய பண்ணை நடத்துவதாகவும், அங்கு விளையும் பொருட்களைக் கடை அமைத்து தமக்கே விற்பனை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியதுடன், விவசாயப் பொருட்கள் கடையையும், விவசாய பண்ணை பெயர்ப்பலகையையும் இதன்போது சுட்டிக்காட்டியதாக வவுனியா செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கூர்மை செய்தித் தளத்திற்கு கருத்து வெளியிட்ட காணி உரிமையாளர்களில் ஒருவர்,

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இராமியன்குளம் பகுதியில் உள்ள காணிகளில் கடந்த 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நாங்கள் விவசாயம் மேற்கொண்டு பராமரித்து வந்தோம். போர் காரணமாக அங்கிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் எமது நிலங்களில் குடியேறினோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிப்புப் போர் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்க அதிகளவிலான நிலங்கள் தேவைப்பட்டன. இதனையடுத்து அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் இராமியன்குளம் பகுதி நிலத்தை விட்டுத்தருமாறும் இந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதும், உங்களது நிலம் மீண்டும் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினர்.

இதற்கமைய நாங்களும் எமது காணிகளை விட்டுக்கொடுத்தபோதும் கடந்த 2013 ஆம் ஆண்டளவில் அகதிகளாக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று விட்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் இந்த நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன், இதில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மக்களது நிலங்களை அபகரித்துள்ள இலங்கை இராணுவம், அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கடந்த பல வருடங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இதனை போர் இடம்பெற்ற தாயக பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உறுதிப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இது குறித்து இலங்கை ஜனாதிபதி உட்பட ஆட்சியில் உள்ளோரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு கிழக்கில் காணிகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளோர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.